Twitter வழியாக இனி வீடியோ & ஆடியோ காலிங் செய்யலாம்! எலான் மஸ்க் வெளியிட்ட புது அப்டேட்!

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை அதில் கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அதன் லோகோ மற்றும் பெயரை மாற்றியது, ட்விட்டரில் ப்ளூ டிக் சப்ஸ்க்ரிப்ஷனை கட்டண சேவையாக மாற்றியது என பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரின் பாரம்பரிய லோகோவான பறவை படத்தை மாற்றி விட்டு, மஸ்குக்கு பிடித்த X என்பதை லோகோவாக அறிவித்தார் எலான். மேலும், விரைவில் சீன செயலிகளை போல ஒரே செயலியில் சமூக வலைத்தளம், பணப்பரிவர்த்தனை என பல்வேறு சேவைகளை வழங்குவதற்கான பணிகளையும் முன்னெடுத்து வருவதாக அறிவித்திருந்தனர்.

எலான் மஸ்க் ட்வீட்

இதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள தகவலின்படி, விரைவில் ட்விட்டர் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. iOS, Android, Mac & PC என அனைத்து டிவைஸ்களிலும் இந்த Feature வேலை செய்யும்படி அறிமுகமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போன் நம்பரே இல்லாமல் காலிங் வசதி

இதற்கு போன் நம்பர் கூட தேவை இல்லை. X ஒரு உலகளாவிய முகவரி புத்தகமாக விளங்கும் என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் ஒரு செயலியாக ட்விட்டரை மாற்றும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. அதன் செயல்பாடுகள் தனித்துவமானதாக இருக்கும் என்றும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

மெட்டாவுக்கு போட்டியா?

ஏற்கனவே மெட்டா நிறுவனத்தின் பகுதியாக இருக்க கூடிய இன்ஸ்டாகிராம், வாட்ஸப், முகநூல் ஆகிய தளங்களில் இந்த வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ட்விட்டருக்கு மாற்றாக மார்க் சுக்கர்பெர்க் Thread என்ற செயலியை அறிமுகப்படுத்தியிருந்தார். அதிலிருந்து மார்க் மற்றும் எலான் இடையே வெளிப்படையான பஞ்சாயத்து அவரவர் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எலான் அறிமுகம் செய்திருக்கும் இந்த அம்சம் டெக் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகமாக போகும் இந்த ட்விட்டர் காலிங் வசதியின் செயல்பாடு குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.