ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் தென்காசி விஞ்ஞானி!

தமிழர்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த சாதனைகளில் தமிழர்களும் முக்கிய பங்காற்றி வருவது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சந்திரயான் 3

சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது இஸ்ரோ. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்காததால் குறைந்த பட்ஜெட்டில் இந்தியா மேற்கொண்ட இந்த முயற்சி உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

வீரமுத்து வேல்

எதிர்பார்ப்புக்கு ஏற்றது போலவே சந்திரயான் 3 திட்டத்தை வெற்றி பெற செய்த இஸ்ரோ விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து அரிய பல தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவித்து வருகிறது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை மேலும் உயர்த்திய சந்திரயான் 3 மிஷனின் திட்ட இயக்குநராக தமிழரான விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்ததை தமிழர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

தமிழ்நாட்டு பெண்

இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் தமிழர் ஒருவரே உள்ளார். அதுவும் அவர் ஒரு பெண் என்பது தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமை. ஆதித்யா எல் 1 விண்கலம் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்த விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இஸ்ரோவின் அடுத்த மைல்கல்லாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

தென்காசி நிகர் ஷாஜி

இதன் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நிகர் ஷாஜி உள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த நிகர் ஷாஜியின் பெற்றோர் சேக் மீரான் – சைத்தூன் பீவி. இந்த தம்பதியின் இரண்டாவது மகள்தான் நிகர் ஷாஜி. இவரது இயற்பெயர் நிகர்சுல்தான் ஆகும்.

சந்திராயன் 3 வெற்றிகரமாக சேவையை மேற்கொள்ள சிறப்பு பிரார்த்தனை
படிப்பிலும் டாப்பர்

தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த நிகர் ஷாஜி, படிப்பிலும் படு சுட்டியாம் 1978-79-ஆம் கல்வியாண்டில், 10-ம் வகுப்பில் 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்து அப்போதே சானை படைத்துள்ளார்.

இஸ்ரோவில் பணி

1980-81 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்த நிகர் ஷாஜி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படித்தார். பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்த நிகர் ஷாஜி, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உட்பட பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் சென்று வந்துள்ளார் நிகர் ஷாஜி.

நிகர் ஷாஜியின் குடும்பம்

நிகர் ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் முகம்மது தாரிக் நெதர்லாந்தில் விஞ்ஞானியாக உள்ளார். நிகர் ஷாஜியின் மகள், தஸ்நீம் பெங்களூரில் மருத்துவம் பயின்று வருகிறார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த நிகர் ஷாஜி, தற்போது இஸ்ரோவின் முக்கிய திட்டமான ஆதித்யா எல் 1 திட்டத்தில் திட்ட இயக்குநராக பணியாற்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமையடைய செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.