புதுடெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாத மழைப்பொழிவு ஒரு நூற்றாண்டில் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் பெறப்படும் மழையளவைவிட 36 சதவீதம் குறைவாகப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டச் செய்தியில், “இந்தியாவில் உள்ள 4 பருவ காலங்களில் ஆகஸ்ட் மாதத்தில்தான் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகும். அதாவது சராசரியாக 25.4 செ.மீ மழைப்பொழிவு பதிவாகும். ஜூலையில் அதிகபட்சமாக 28 செ.மீ மழைப்பொழிவு பதிவாகும்.
ஆனால் எல் நினோ காலநிலை தாக்கம் வலுப்பெற்று வருவதாலும் அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும் சாதகமற்ற சூழல் நிலவுவதாலும் ஆகஸ்ட் மாதம் மழைப்பொழிவு பற்றாக்குறை நிலைக்கு சரிந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இமாலய மாநிலங்களிலும், தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும் ஆகஸ்ட் மழைப்பொழிவு சற்று சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ என்றால் என்ன? எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation) என்பது கிழக்கு பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் நிகழ்வுகளின் தொகுப்பு. இதில் முதன்மையாக இரண்டு நிலைகள் உண்டு: ஒன்று, எல் நினோ (El-Nino) எனப்படும் வெப்பமான காலகட்டம்; மற்றொன்று, லா நினா (La Nina) என்று அழைக்கப்படும் குளிர்ந்த காலகட்டம். இரண்டுக்கும் இடையிலான சமநிலை (Neutral Phase) காலகட்டமும் உண்டு.
தெற்கு அலைவு ஓர் இயற்கைச் சுழற்சி. பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்படும் காற்று, கடல்பரப்பு வெப்பநிலை மாற்றங்களால் உந்தப்பட்டு, இந்தத் தெற்கு அலைவு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எல் நினோவாகவும் லா நினாவாகவும் வெளிப்படும். தென் அமெரிக்கக் கடற்பகுதியில் ஏற்படும் இந்த நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள காலநிலையைப் பாதிக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக, உலக நாடுகளின் சராசரி வெப்பநிலை, மழைப்பொழிவு ஆகியவை தெற்கு அலைவைப் பொறுத்தே அமையும்.
ஒரு நூற்றாண்டில் குறைந்த அளவு: இந்நிலையில் இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் சராசரி மழைப்பொழிவு குறைந்துள்ளது. அதாவது இந்தியாவில் ஆகஸ்ட் மாத மழைப்பொழிவு ஒரு நூற்றாண்டில் மிகக் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது. கடைசியாக குறைவான அளவில் ஆகஸ்ட் சராசரி மழைப்பொழிவு பதிவானது 2005ல். அப்போது சராசரியைவிட 25 சதவீதம் குறைவாக மழை பதிவகியிருந்தது. 2009-ல் இந்தியா அரை நூற்றாண்டில் இல்லாத வறட்சியைக் கண்டது. அப்போது ஆகஸ்ட் சராசரி மழைப்பொழிவு இயல்பை விட 24 சதவீதம் குறைவாகப் பதிவாகி இருந்தது. இந்நிலையில் இந்த ஆகஸ்டில் (2023 ஆகஸ்ட்) சராசரியைவிட 36 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
“ஆகஸ்ட் மழைப்பொழிவு தேசிய அளவில் 10 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. பிராந்திய அளவில் கிழக்கு, வடகிழக்கில் 17%, மத்திய இந்தியாவில் 10% மற்றும் தென் இந்தியாவில் 17 சதவீதம் என்று பதிவாகியுள்ளது. மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவ காலத்தில் மழை இல்லாத நாட்களான ’பிரேக் டேஸ்’ (Break Days) அதிகரித்துள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை 31-ல் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் மாத மழைப்பொழிவு சராசரிக்குக் குறைவாக இருக்கும் எனக் கணித்தது. ஆனால் இந்த அளவு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் மழையளவு சராசரியாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.