இன்று சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் தமிழ் வம்சாவளி வெற்றி பெற வாய்ப்பு | Chances are Tamil descent will win presidential election in Singapore today

ஜூரோங்:சிங்கப்பூரில் இன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்னத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார்.

இதையடுத்து, புது அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், 66, சீன வம்சவாளிகளான இங் கொக் செங், 76, டான் கின் லியான், 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வேட்பாளர்கள் நேற்று உச்சக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழில் பேசி அவர்கள் ஓட்டு சேகரித்தனர்.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தர்மன் சண்முகரத்னம் பொதுமக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க இந்த அதிபர் பதவி உதவியாக இருக்கும் என நம்புகிறேன். ஓர் அரசியல்வாதியாக இல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு அதிபராக சேவை செய்ய விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவினாலும், அரசுப் பணிகளில் அதிகளவு அனுபவம் வாய்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நம் அண்டை நாடான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், கடந்த 2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவருக்கு, இந்த அதிபர் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

அதிபர் தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1991-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, இது பொதுமக்களே நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்ட பின் நடக்கும் மூன்றாவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.