புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்ல உள்ளதை பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்தப் பயணத்தின் போது, இலங்கை அதிபரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இலங்கையுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள நுவரெலியா மற்றும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம், இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவை மேம்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷியான்-6, இலங்கைக்கு அடுத்த மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுக் கப்பல் ஷியான்-6 இலங்கைக்கு வர அனுமதிக்குமாறு அந்நாட்டிற்கு சீனா சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. சீன தூதரகத்திடம் இருந்து இத்தகைய கோரிக்கை வந்துள்ளதை இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் ஒப்புக்கொண்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 12 வரை சீனப் போர்க்கப்பலான யுவான் வாங்-5 கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராஜதந்திர மோதலை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு ஏற்பட்டு சரியாக ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், சீனா தற்போது தனது ஆராய்ச்சிக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்பதால், இவ்விஷயத்தில் ராஜ்நாத் சிங் இந்தியாவின் எதிர்ப்பை உறுதியுடன் முன்வைப்பார் என கூறப்படுகிறது.