உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களை தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கான டிஜிட்டல் தளம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகம்

தற்போது நடைபெற்று வரும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை அமைச்சுகளுக்கு இடையேயான பங்குதாரர்களுடன் ஒருங்கிணைத்து, தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கானதொரு டிஜிட்டல் தளத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய ஆகியோர் இந்த புதுமையான டிஜிட்டல் பின்தொடர்தல் பொறிமுறையை 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

இலங்கைக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான உறுதியான பின்தொடர்தல், நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் விரிவான செயற்றிறன் மதிப்பீடு ஆகியவற்றை உறுதி செய்வதே இந்த முன்முயற்சியின் அடிப்படை நோக்கமாகும்.

மேற்கூறிய கருவிகளை செயற்படுத்தும் செயன்முறையை பின்தொடரும் வகையில், மையப் புள்ளிகளான 27 வரிசை அமைச்சுக்களால் பரிந்துரைக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தப் பின்தொடர்தல் பொறிமுறையின் வழிமுறைகளை எடுத்துக்காட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயற்றிறன் மீளாய்வு மற்றும் நடைமுறைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அமீர் அஜ்வாத், அமைச்சுகளுக்கு இடையிலான மையப் புள்ளிகளுக்கு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.