அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பாக, இந்தாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் லோக் சபா தேர்தலுக்கு பா.ஜ.க கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் தயாராகிவரும் வேளையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான, `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தங்களின் திட்டத்தை பா.ஜ.க தற்போது கையிலெடுத்திருக்கிறது.
செப்டம்பர் 18 – 22 வரை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க இதனை அமல்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் பலவும், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன. இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சியான அ.தி.மு.க, ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்பதாக அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அ.தி.மு.க ஆதரிக்கிறது. மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க வலியுறுத்துகிறது. இது, நம் நாட்டின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும். அதேசமயம், அரசியல் நிலையற்ற தன்மையைத் தவிர்க்கும்.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது நேரத்தையும், பெரும் செலவையும் மிச்சப்படுத்தும். அதோடு, எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாட்சி அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு கொள்கைகளைத் திறம்பட செயல்படுத்த நீண்ட இடைவிடாத ஆட்சிக் காலத்தை இது வழங்கும். மேலும், இந்த செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவதோடு, சிறந்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் ஜனநாயக பங்கேற்புக்கு வழிவகுக்கும்.
`ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அறிவிக்கப்படும் ஜனரஞ்சக திட்டங்களைவிடவும், வளர்ச்சியே ஆட்சியின் முக்கிய மையமாக இருக்கும். எனவே, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் குழு, நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY