சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக ஆதரவு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. அது நமது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். அதேநேரத்தில், அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும்.
ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது நேரத்தையும், பொருட்செலவையும் மிச்சப்படுத்தும். மேலும், கூட்டாட்சி மற்றும் மாநிலம் ஆகிய இரண்டுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும்.
இந்த செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஜனநாயக பங்கேற்புக்கும் வழிவகுக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அறிவிக்கப்படும் கவர்ச்சிகர திட்டங்களை விட வளர்ச்சியே ஆட்சியின் முக்கிய மையமாக இருக்கும்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் குழு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.