கண்டி பெரஹெராவை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கான ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரா பாதுகாக்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படும் – ஜனாதிபதி.

தேசத்தின் வண்ணமயமான கலை நிகழ்வாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களினால் நேற்று (31) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

ஊர்வலமாக கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல உட்பட நிலமேமார்களை, ஜனாதிபதி வரவேற்றார்.

அதனையடுத்து தியவடன நிலமே ஜனாதிபதியிடத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆவணத்தை கையளித்தார்.

பெரஹெராவில் கலந்துகொண்ட யானைகளை அடையாளப்படுத்தும் வகையில் “சிந்து’ யானைக்குட்டிக்கு ஜனாதிபதியால் பழங்கள் வழங்கப்பட்டன.

அதனையடுத்து பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கமைய ஜனாதிபதியுடன் நிலமேக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பெரஹெராவில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. “எசல பெரஹெர பாரய” நிதி அன்பளிப்பு பிட்டிசர விகாரைக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய மாகாண கலாசார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட “பூஜனிய தலதா சங்ஸ்குறுத்திய” (போற்றத்தக்க தலதா கலாசாரம்) என்ற நூலும் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

பெரஹெராவை ஏற்பாடு செய்திருந்த தியவடன நிலமே உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத மற்றும் தேசிய நிகழ்வாக மாத்திரமின்றி இலங்கையின் கலாசாரத்தை உலகறியச் செய்யும் வண்ணமயமான கலாசார கலை நிகழ்வான வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெராவை பாதுகாத்து தொடர்ச்சியாக நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

“யானைகளைப் பாதுகாக்க வேண்டிய அதேநேரம், எமது பாரம்பரிய சம்பிரதாயங்களை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெரஹெராவுக்கான யானைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அடுத்த வரும் சுற்றுலாத்துறையில் முன்னேற்றத்தை அடைவதற்கான வேலைத்திட்டத்தில் கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெரா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்‌ஷ, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏபக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன மற்றும் அரசாங்க அதிகாரிகள், முப்படை பிரதானிகள், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, ஏனைய நிலமேமார்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.