சமீபத்தில் கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் ஆகி, பெரும் வரவேற்பை பெற்றது. சென்னையில் சில தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிந்ததில் படத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன், மகிழ்ந்து நெகிழ்ந்தார். ‘வேட்டையாடு விளையாடு’வின் வெற்றி பல தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
அதனையடுத்து கமலின் ‘ஆளவந்தான்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்யப் போவதாக தாணு அறிவித்தார். இப்போது விஜய்யின் கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். விஜய் – த்ரிஷாவின் அந்த ஹிட் காம்போதான் இப்போது ‘லியோ’வில் இணைந்திருக்கிறது என்பதால், `கில்லி’யை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றார் அதன் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம். கடந்த 2004ம் ஆண்டில் வெளியாகி, 20 ஆண்டுகள் ஆன நிலையில், அப்போது ஃபிலிமில் படமாக்கப்பட்ட இப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் ‘சச்சின்’ சூர்யாவின் ‘காக்க காக்க’ படங்களையும் ரிரிலீஸ் செய்யவிருக்கின்றனர். இன்னொரு பக்கம் கமலின் ‘ஆளவந்தான்’ மறுவெளியீடு ஆவதால், அதன் நவீன தொழில்நுட்ப வேலைகளும் தீவிரமாகி உள்ளன. அடுத்த மாதம் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். ‘ஆளவந்தான்’ படத்தில் கமலுக்கு இரண்டு வேடங்கள். ஒருவர் கமாண்டோ, மற்றொருவர் கொடூர வில்லன். கமல் தவிர ரவீணா டாண்டன், மனீஷா கொய்ராலா, மிலிந்த் குணாஜி, சரத்பாபு, அனுஹாசன் என பலரும் நடித்திருப்பார்கள்.
இது பற்றி தாணுவிடம் விசாரித்தேன். ”ஆளவந்தான்’ மட்டுமல்ல, எங்களோட தயாரிப்பில் வெளியான விஜய் சாரின் ‘சச்சின்’, சூர்யா சாரின் ‘காக்க காக்க’ படங்களையும் ரீ -ரிலீஸ் பண்றேன். மூன்று படங்களின் வேலைகளும் மும்முரமாக நடந்துட்டு இருக்கு. ‘ஆளவந்தான்’ படம் அந்த சமயத்திலேயே மோஷன் கிராஃபிக்ஸ் கேமராவைப் பயன்படுத்திருப்போம். லைவ் சவுண்ட், மாறுபட்ட திரைக்கதை என ஒவ்வொரு காட்சியும் வியக்க வைக்கும். அதில் மோஷன் கிராபிக்ஸ் தொழில்நுட்பம், ஆசியாவிலேயே, முதன்முறையாக ‘ஆளவந்தான்’ல தான் பயன்படுத்தினோம். இப்போது இன்னும் நவீன தரத்தில், புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. முதலில் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ், அதனைத் தொடர்ந்து டீசர், டிரெய்லர் எனப் புதுப்படத்தின் புரொமோஷன் போல, ஒவ்வொன்றாக வெளிவரவிருக்கிறது. இப்படி ‘சச்சின்’, ‘காக்க காக்க’ படங்களின் மறுவெளியீடும் அமையவிருக்கிறது” என்கிறார் தாணு.