கர்நாடகாவுல சிங்கம் மாறி இருந்தாரு.. இங்க அசிங்கம் பண்ணிட்டு இருக்காரு.. அண்ணாமலையை தாக்கிய சீமான்

சென்னை:
“கர்நாடகாவில் சிங்கம் மாதிரி இருந்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் அசிங்கம் செய்து கொண்டு இருக்கிறார்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இதனிடையே, நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று சீமான் பகிரங்கமாக அறிவித்தார். சீமானின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வியெழப்பினர்.

“சீமான் எங்கே நின்றால் என்ன?”
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “சீமான் அண்ணன் எங்கே நின்றால் என்ன? எங்கே நின்றாலும் அவர் தோற்கப் போவது உறுதி. அப்படி இருக்கும் போது அவர் மோடியை எதிர்த்து ராமநாதபுரத்தில் நின்றால் என்ன.. வாரணாசியில் நின்றால் என்ன? சீமான் அண்ணன் சும்மா வாய் இருக்குனு எதையாவது பேசிட்டு இருப்பாரு. சீமான் ஊழலை எதிர்ப்பவர் என்றால் திமுகவில் இருக்கும் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகிய ஊழல் தலைவர்களை எதிர்த்து நிற்க வேண்டியது தானே” எனக் கூறினார்.

சீமான் பதிலடி:
இந்நிலையில், அண்ணாமலை தன்னை விமர்சித்ததற்கு சீமான் இன்று பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “நான் தயாநிதி மாறன், டி.ஆர். பாலுவை எதிர்த்து போட்டியிடுவது இருக்கட்டும். பாஜக அவர்களை எதிர்த்து போட்டியிட வேண்டியதுதானே. ஊழல் ஊழல்னு சொல்றீங்களே.. ஏன் உங்க கட்சியில் (பாஜக) ஊழல் இல்லையா? மகாராஷ்டிரா மாநிலத்தில் 42 எம்எல்ஏக்களை நீங்க விலை கொடுத்து வாங்குனீங்க. ஒருத்தருக்கு 132 கோடி என மொத்தமாக 5000 கோடி செலவு பண்ணிருக்கீங்க. இதுக்கு பெயர் என்ன?

“நீங்களும் ஊழல்வாதிகள்தானே”
ஏதோ உங்க ஆட்சியில் நாட்டில் மது ஒழிந்தது போலவும், எல்லோருக்கும் சமமான கல்வி, மருத்து சிகிச்சைகளை கொடுத்தது போலவும் பேசிட்டு இருக்கீங்க. ரஃபேல் போர் விமானம் வாங்குனதுல ஊழல் இருக்கா இல்லையா? நீங்களும் ஊழல்வாதிகள் தானே. அப்புறம் உங்களை எதிர்த்து நான் போட்டியிட கூடாதா? என்னை வாரணாசியில் போட்டியிட சொல்றாரு அண்ணாமலை.

சிங்கம் – அசிங்கம்:
இதெல்லாம் என்ன பேச்சு.. தம்பி அண்ணாமலை கர்நாடகவில் தான் போலீஸ் அதிகாரியாக இருந்தார். அப்போ கர்நாடகா பாஜக தலைவராக நீங்க ஆகி இருக்கலாமே என கேட்க முடியுமா.. காவல்துறை அதிகாரியாக இருந்த போது கர்நாடகாவில் சிங்கம் மாதிரி இருந்த அண்ணாமலை, இங்கே வந்து அசிங்கம் பண்ணிட்டு இருக்காரு. இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.