ஒட்டுமொத்த அ.தி.மு.க-வுமே மதுரை மாநாட்டின் நிகழ்வுகள் குறித்து அசைப்போட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், ‘கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்’ என்று அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான போயஸ் கார்டன் டிரைவர் கனகராஜின் அண்ணனும், வழக்கில் தொடர்புடையவருமான தனபால் கூறியிருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் சூட்டை கிளப்பியதோடு, ‘ சும்மா ரோட்டுல போகிறவன் சொன்னதை வச்சுக்கிட்டு ஏன்ட கேள்வி கேட்கிறதே தப்பு’ என சொல்லும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமியையும் சூடாக்கி இருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரின் கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதியில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள், அதை தொடர்ந்து மர்ம விபத்து மரணங்கள், தற்கொலை என அவிழ்க்க முடியாத முடிச்சுகள் ஏராளம் நடந்துவிட்டன. இந்த வழக்கானது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. அதுமட்டுமல்லாது இந்த வழக்கில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக கசியும் செய்திகள்தான் அரசியல் களத்தில் எப்போதும் ஹாட் டாப்பிக்-காகவே இருக்கிறது. திடீரென சூடுப்பிடிப்பதும் பின்பு கப்சிப்பென இருப்பதும் கடந்த 5 ஆண்டுகளாக வாடிக்கையாகவே நடக்கிறது.
அதன்படிதான், கொடநாடு கொலை கொள்ளை வழக்கை அரசு விரைவாக விசாரிக்கவேண்டும் என்று பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தார். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக கொடநாடு வழக்கை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாகதான் கனகராஜ் பயன்படுத்திய 30 செல்போன்கள் மற்றும் 100 சிம் கார்டுகளின் விவரங்களை சிபிசிஐடி சேகரித்து வருகிறது. இந்நிலையில்தான், இந்த வழக்கு, கனகராஜின் அண்ணன் தனபாலின் திடீர் பேட்டியால் அனலை கிளப்பியிருக்கிறது. இதைத்தொடர்ந்துதான், வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க சீனியர்கள் மீண்டும் பேசி வருகிறார்கள்.
இதுகுறித்து அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்த சில நாள்களிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடித்தார் எடப்பாடி. இதை யாருமே மறுக்கமுடிடாது. சம்பவத்தில் ஈடுப்பட்ட அனைவரும் தொழிற்முறை குற்றவாளிகள்தான். எங்கு கொள்ளை அடிக்கலாமென்று அதே நோக்கத்தோடு அலைபவர்கள். ஆனால் அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து வெளியே அனுப்பியது, எடப்பாடி இல்லை தி.மு.கதான்.
தொழிற்முறை குற்றவாளிகளுக்கு ஏன் ஜாமீன் வழங்கினீர்கள்… அவர்களுக்கு ஏன் துணை போனீர்களென்று நூறு முறைக்கு மேல் சட்டமன்றத்தில் எடப்பாடி முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு இன்று வரை பதில் இல்லை. கொடநாடு குற்றவாளிகளுக்கு துணைபோகும் தி.மு.கதான் முதல் குற்றவாளி. ஆட்சி மீதான அதிருப்தியை மறைக்க, குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைத்த எடப்பாடி மீது இதுபோன்று அற்பத்தனமாக எதையாவது கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள். கொரானாவினால் வழக்கை தொடரமுடியாமல் போனது. அப்படி வழக்கு எதில் நின்றதோ அங்கு அப்படியேதான் நிற்கிறது. இதேபோலதான், நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் எடப்பாடிமீது அபத்தமான குற்றச்சாட்டை திமுக முன்வைத்தது. அதை உச்ச நீதிமன்றம் வரை சென்று தன்மீது தவறு இல்லை என்பதை தெளிவுப்படுத்தி திமுகவினரை மண்ணை கவ்வ வைத்தார் எடப்பாடி. எனவேதான், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்கிறோம்.” என்றார்.
தொடந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “கொடநாடு சம்பவம் நடைபெற்ற உடனுக்கு உடன் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தது அ.தி.மு.க அரசு. ஆனால், குற்றவாளிகளுக்கு தி.மு.க-வை சார்ந்தவர்கள்தான் ஜாமீன் வாங்கி வெளியே விட்டார்கள். அவர்கள் அனைவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் புகைப்படமே எடுத்துக் கொண்டார்களே… இதற்கு திமுகவினரிடம் பதில் இருக்கிறதா?
உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது, கொடநாடு விவகாரத்தில் அ.தி.மு.க-வை தேவையில்லாமல் சீண்டுகிறது தி.மு.க. இப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தி.மு.க அரசு செயல்படுவதால்தான், சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று நாங்கள் கேட்கிறோம். இதை நாங்கள் இப்போது கேட்கவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பல முறை வலியுறுத்தி இருக்கிறோம். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மை தெரியவரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ-வும் தி.மு.க சட்டத்துறையின் இணை செயலாளர் பரந்தாமனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்தேறியது அ.தி.மு.க ஆட்சியில்தான். அப்போது இந்த வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஒழுங்காக நடைபெறும்போது, எடப்பாடிக்கு உதறல் வந்துவிட்டது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிஐ விசாரிக்கும் குட்கா வழக்கில் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. குற்றவாளிகளை விசாரிப்பதற்கான ஒப்புதலை ஆளுநர் வழங்காமல் இழுத்தடிக்கிறார். சி.பி.ஐ விசாரணை என்பதால்தான் குற்றவாளிகளும் ஆளுநர் மாளிகையில் ஒழிந்துக் கொள்ள வசதியாக இருக்கிறது. அதேபோல, கொடநாடு வழக்கில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று எடப்பாடி உள்ளிட்டோர் துடியாய் துடிக்கிறார்கள்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY