சிங்கப்பூர்:
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் அதிபராக தமிழர் ஒருவர் வெற்றி பெற்றதை அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வந்த ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) நடைபெறும் என சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அதிபர் ஹலிா அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டில் கேபினட் அமைச்சராக இருந்த தர்மன் சண்முகரத்னம், அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். இதற்காக தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதேபோல, சீன வம்சாளவியை சேர்ந்த கோக் சங், டான் கின் லியான் ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.
மூன்று வேட்பாளர்களில் ஒருவர் தமிழர், ஒருவர் சீனர், ஒருவர் சிங்கப்பூர் காரர் என்பதால் அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், இன்று பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று இரவு வெளியாகின. இதில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மொத்த வாக்குகளில் 70.4 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் சிங்கப்பூரின் 9-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தர்மன் சண்முகரத்னம். தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதை சிங்கப்பூரில் உள்ள தமிழர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்பு சிங்கப்பூரில் செல்லப்பன் ராமநாதன் என்ற தமிழர் 2009-ம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.