மூணாறு:மூணாறில் சுற்றுலா பகுதிகளுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் ‘சைட் சீயிங்’ பஸ்கள் மூலம் பயணிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறுக்கு வரும் பயணிகள் பயன் பெறும் வகையில் பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து சுற்றுலா பகுதிகளுக்கு ‘சைட் சீயிங்’ பஸ்கள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக மூணாறில் இருந்து டாப் ஸ்டேஷன், சதுரங்கபாறை, காந்தலூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அவை தினமும் காலை 9:00 மணிக்கு டிப்போவில் இருந்து புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு திரும்பும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழித்தடத்திலும் வழி நெடுகிலும் உள்ள சுற்றுலா பகுதிகளை ரசிக்கவும், அப்பகுதிகளில் நேரம் செலவழிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
50 இருக்கைகள் கொண்ட பஸ்சில் நபருக்கு தலா ரூ.300 கட்டணம் வசூலிக்கின்றனர். நடுத்தர மக்கள், பட்ஜெட் சுற்றுலா வரும் பயணிகள் ஆகியோருக்கு சைட் சீயிங் பஸ்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன.
மூணாறு டிப்போவைச் சேர்ந்த டிரைவர்கள் முகம்மது, சிஜூ, பென்னி பயண ஏற்பாடுகளை செய்கின்றனர். அவர்களை 94473 31036, 94469 29036, 98950 86324 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு உட்பட தகவல்களை பெறலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement