சென்னை: சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை எம்.பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக நிலுவையில் உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம்: இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அவருக்கு ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ய முடியாது எனக் கூறிய நீதிபதி ரவி, இதுதொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார்.
அதன்படி செந்தில் பாலாஜி்க்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பட்டியலிடப்படாத நிலையில், இதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தையே அணுகலாம் என முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி தெரிவி்த்தார்.
அதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக முறையிட்டபோது, இந்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா, அதற்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதை உயர் நீதிமன்றத்தை அணுகி தெளிவுபடுத்திக் கொண்டு வர அறிவுறுத்தினார்.
அதன்படி செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இந்த ஜாமீன் மனு தொடர்பாக நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையிட்டார்.
அதையடுத்து நீதிபதி எம்.சுந்தர், ‘‘இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கெனவே விலகி விட்டார். இந்த சூழலில் இந்த முறையீட்டை நாங்கள் எப்படி ஏற்பது?’’ எனக் கூறி, இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை அணுக அறிவுறுத்தியுள்ளார்.