சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் இயந்திரமான ஃபிளமிங்கோ இன்று சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது, என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம் 4-ல் ஃபிளமிங்கோ என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்தில் சுரங்கம் அமைக்கும் பணியை திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் துவங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-I மற்றும் கட்டம்-I நீட்டிப்புக்கு பிறகு, வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ. நீளத்துக்கு மேலும் 3 வழித்தடங்களில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டப் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்தில் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

வழித்தடம் 4 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் 10 கி.மீ. நீளத்துக்கு, கலங்கரை விளக்கத்தில் தொடங்கி, சென்னையின் பழமையான பகுதிகளான மயிலாப்பூர், கச்சேரி சாலை வழியாக ஆழ்வார்ப்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்கிறது.

இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு (UG-01 & UG-02) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வழித்தடத்தில் (Flamingo, Eagle, Peacock and Pelican)நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஃபிளமிங்கோ (SI352A)மற்றும் கழுகு (SI074B) கலங்கரை விளக்கத்திலிருந்தும், மயில் (SI074B)மற்றும் பெலிகன் (SI075B) பனகல் பூங்காவிலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 2, வழித்தடம் 4-ல் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம், ஃபிளமிங்கோ கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை மெட்ரோ வரையிலான 1.96 கி.மீ. நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று (செப்.1) சென்னை மெரினா கடற்கரை அருகில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கியுள்ளது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம் 4-ல் பூமிக்கு அடியில் 30 மீ ஆழத்தில் கீழ்நிலையில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கப்பட்டு கச்சேரி சாலை வழியாக திருமயிலை நிலையத்தை ஒரு வருட காலத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஆழ்வார்ப்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக சுரங்கம் தோண்டப்பட்டு இறுதியாக மே 2026-ல் போட் கிளப்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.