
டைம் டிராவல் கதையில் விஜய்யின் 68வது படம்: வெங்கட் பிரபு சூசக தகவல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஜய்யின் 68வது படமான இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அவர் தந்தை, மகன் என 2 வேடங்களில் நடிக்கிறார். ஜெய், பிரபுதேவா, அபர்ணா தாஸ் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது படத்தின் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் படத்துக்கான தொழில்நுட்பப் பணிகளை பார்வையிடுகின்றனர்.

இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் “எதிர்காலத்துக்கு வருக”என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவன அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இந்த படத்தின் கதை வெங்கட் பிரபு இயக்கிய 'மாநாடு' படம் போன்ற டைம் டிராவல் கதை என்று தெரிகிறது. 50 வருடங்களுக்கு பிறகு தனது மகனுக்கு ஏற்படும் ஆபத்தை தந்தை விஜய் டைம் டிராவல் மூலம் சென்று தடுத்து காப்பாற்றுவது மாதிரியான கதை என்கிறார்கள்.