திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ வகை ரயில்களை இயக்க சாத்தியக்கூறு – அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: திருச்சி, திருநெல்வேலி, சேலத்தில் மெட்ரோ வகை ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறையிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவும் கோரிக்கை எழுந்தது. இந்த மாநகரங்களில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்து திட்டம் (Mass Rapid Transit System – MRTS) தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, திருச்சி, திருநெல்வேலி, சேலத்தில் எம்ஆர்டிஎஸ் போக்கு வரத்துக்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுவந்தது. இந்நிலையில், தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறையிடம் இந்த அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று சமர்ப்பித்தது.

சென்னை நந்தனத்தில், தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் இதை வழங்கினார். மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி, திருநெல்வேலி, சேலம் மாநகராட்சிகளில் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் எம்ஆர்டிஎஸ் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதன்மூலம் மேற்கண்ட மாநகரங்களுக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் அதற்கேற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டன.

அதன் அடிப்படையில், மெட்ரோ ரயில் வகை போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு 45 எம்ஆர்டிஎஸ் நிலையங்கள், திருநெல்வேலியில் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ. தூரத்துக்கு 40 நிலையங்கள், சேலத்தில் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ. தூரத்துக்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.