கொல்கத்தா,
132-வது தூரந்த் கோப்பை கால்பந்து தொடர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் மோகன் பகான் மற்றும் கோவா எப்சி அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்.
முதல் பாதியில் இரு அணிகளுமே 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மோகன் பகான் மேலும் ஒரு கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் அர்மாண்டோ சாதிகு அந்த கோலை அடித்தார். அதுவே வெற்றிக்குரிய கோலாக அமைந்தது. அதன்பின் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. முழு நேர ஆட்ட முடிவில் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்சியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
மோகன் பகான் அணி தரப்பில் ஜேசன் கம்மிங்ஸ் மற்றும் அர்மாண்டோ சாதிகு இரு வீரர்களும் தலா ஒரு கோல் அடித்தனர். கோவா எப்சி தரப்பில் நோவா சதாவுய் மட்டும் ஒரு கோல் அடித்தார். மோகன் பகான் இறுதி போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியுடன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது.