நந்தி ஹில்ஸ் (Nandi Hills) என்று சொன்னால் பெங்களூரு மக்களுக்கு நன்றாக தெரியும். தலைநகரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தலம். இதன் பெயருக்கு பின்னால் பல்வேறு கதைகள் சொல்லப்படுவது உண்டு. சோழர் காலத்தில் ஆனந்தகிரி என்று அழைக்கப்பட்டதாகவும், யோக நந்தீஸ்வரர் இங்கே தவம் செய்ததால் ‘நந்தி மலை’ என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.
நந்தி ஹில்ஸ் சுற்றுலா தலம்
இதன் உச்சியில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலும், நந்தி சிலையும் இருக்கிறது. இதுதவிர ஏராளமான செடி, கொடி, மரங்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. மேகங்கள் சூழ்ந்த வானத்தை மிக அருகில் பார்த்து ரசிக்கலாம். மேலிருந்து பள்ளத்தாக்கை பார்த்தால் மெய் சிலிர்க்க வைக்கும். மலை ஏறுபவர்கள், ட்ரக்கிங் செல்பவர்கள், ஜில்லென்ற சூழலை அனுபவிக்க விரும்புபவர்கள், அமைதியான சூழலில் பொழுதை கழிக்க விரும்புபவர்களுக்கு நந்தி ஹில்ஸ் சிறப்பான இடம்.
சுற்றுலா பயணிகள் வருகை
வார இறுதி நாட்கள் வந்தால் நந்தி ஹில்ஸில் கூட்டம் அலைமோதி விடும். இதையொட்டி சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 1,000 இருசக்கர வாகனங்கள், 300 கார்கள் நிறுத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கீழிருந்து மலைக்கு ஏறும் போது டிக்கெட் வாங்கி கொண்டு செல்ல வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை செய்துள்ளது. தற்போது நந்தி ஹில்ஸில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தனியார் வாகனங்களுக்கு தடை
இதையொட்டி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் கர்நாடகா மாநில அரசின் சுற்றுலா துறை சில விஷயங்களை முன்னெடுத்துள்ளது. அதன்படி, நந்தி ஹில்ஸில் தனியார் வாகனங்கள் மற்றும் தனி நபர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளது.
மின்சார பேருந்தும், கேபிள் கார் வசதியும்
அதற்கு பதிலாக மினி மின்சார பேருந்துகளை மலையின் கீழிலிருந்து உச்சி வரை இயக்கப்பட உள்ளன. அதாவது, பொது போக்குவரத்தை மட்டும் தான் பயன்படுத்த முடியும். மேலும் கேபிள் கார் வசதியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். நந்தி ஹில்ஸின் மேல் பகுதியில் உள்ள 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த போக நந்தீஸ்வரர் கோயிலில் இரவு நேர விளக்குகள், ஒளிக்கு ஏற்ப மின்னக்கூடிய விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை செய்யவுள்ளனர்.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
8 மாதங்கள் இலக்கு
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் பாரம்பரியம், தொன்மை, சாகசம் ஆகியவை மாறாமல் சுற்றுலா துறை மேம்படுத்தப்படும். இதற்கான பணிகள் அடுத்த 8 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய கூடுதல் தலைமை செயலாளர் கபில் மோகன் தெரிவித்துள்ளார்.