நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில், 51 பேர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். நான்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதனால் அனைத்து மண்டலங்கள் மற்றும் நிலைக்குழுக்களின் தலைவர்களாக தி.மு.க கவுன்சிலர்களே தேர்வானார்கள். தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த பி.எம்.சரவணன், மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருக்கிறார். துணை மேயராக கே.ஆர்.ராஜூ இருக்கிறார்.

மாநகராட்சி மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலாகவே கருத்து வேறுபாடு நிலவுகிறது. தங்களைக் கேட்காமல் மேயர் சரவணன் தன்னிசையாகச் செயல்படுவதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். அத்துடன், தங்கள் வார்டுகளில் நடக்க வேண்டிய அவசியப் பணிகளுக்குக்கூட டெண்டர் விடாமல், கோப்புகளை தனது மேஜையிலேயே வைத்துக் கொள்வதாகவும் புகார் எழுந்தது.
இதனிடையே, மேயர் சரவணன் அதிக கமிஷன் கேட்பதாக மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரே ஆதாரத்துடன் ஆடியோ வெளியிட்டார். ஆனால் அது தனது ஆடியோ கிடையாது என மேயர் சரவணன் மறுத்தார். மாநகராட்சி ஒப்பந்தங்களில் 20 முதல் 25 சதவிகிதம் கமிஷன் கேட்பதாகவும் சரவனன்மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். ஆனால் அவை அனைத்தும் தவறானவை என சரவணன் மறுத்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, மாநகராட்சி ஒப்பந்தங்களில் கமிஷன் வாங்குவது தொடர்பாக மேயர் சரவணன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் அப்போதைய மத்திய மாவட்டச் செயலாளராகவும் இருந்த அப்துல் வஹாப்புடன் மோதல் ஏற்பட்டதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. இது தொடர்பாக பலமுறை விசாரணை நடத்திய கட்சித் தலைமை, கடைசியில் அதிருப்தியடைந்து அப்துல் வஹாப்பின் பதவியைப் பறித்தது. அதன் பின்னர் மாநகராட்சியில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் மேயருக்கு எதிராக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன.
நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தைக்கூட மேயர் சரவணனால் அமைதியாக நடத்த முடியவில்லை. அவரிடம் கவுன்சிலர்கள் பலரும் நேருக்கு நேராக கேள்விகளை எழுப்புவதால், பல நேரங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், 40-க்கும் அதிகமான கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கட்சித் தலைமைக்குப் புகார் மனு அனுப்பினர்.

அந்த புகார் மனுவில், ”நெல்லை மாநகராட்சியின் அடிப்படைப் பணிகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைமை இருக்கிறது. அதனால் மக்களிடம் தி.மு.க அரசுமீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இது எதிரொலிக்கும். அதனால் மேயர் சரவணனை மாற்றிவிட்டு புதிய மேயரை தேர்வு செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அணிதிரண்டு நிற்பது தொடர்பான தகவல் கட்சித் தலைமையின் கவனத்துக்குச் சென்றது. அதனால் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லைக்கு வந்தார். தாழையூத்து பகுதியிலுள்ள தனியார் சிமென்ட் ஆலை விருந்தினர் மாளிகையில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல சேர்மன்கள் மற்றும் சில கவுன்சிலர்கள் மட்டும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தில் நடந்தவை குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், ”மாநகராட்சி ஒப்பந்தங்களில் மேயர் தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, தனக்கு ஒத்துவராத ஒப்பந்ததாரர்களின் பணிகளை நிறுத்தி வைத்து மக்களின் அடிப்படை வேலைகளைக்கூட செய்யவிடாமல் தடுப்பதாக பரபரப்பாக குற்றம்சாட்டினார்கள்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, ’இங்கு நடந்த பேச்சுவார்த்தை குறித்து கட்சித் தலைமையிடம் தெரியப்படுத்துவேன். அதுவரை அனைவரும் அமைதியாகச் செயல்பட்டு நெல்லை மாநகராட்சி மக்களின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என கேட்டுக் கொண்டார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY