சென்னை: பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஸ்மார்ட் மோதிரத்தை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி உதவி மையம் (இங்குபேசன் செல்) மூலம் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களைக் கொண்டு ‘மியூஸ் வியரபிள்’ ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்து, இந்தியா உள்பட 30 நாடுகளில் அதனை விற்பனை செய்கிறது. இதன் தொடர்ச்சியாக மியூஸ் வியரபிள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச் போல, ‘ஸ்மார்ட் ரிங்’ (மோதிர வடிவ தொழில்நுட்பம்) ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.
இந்த மோதிரம் மூலம் உடல்ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் மிகத் துல்லியமாக கண்காணிக்க முடியும். ஸ்மார்ட் வாட்சைவிட 10 மடங்கு எடைகுறைவானது. 24 மணி நேரம்
பயன்படுத்தினாலும், 7 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் அளவுக்கு வடிவமைத்துள்ளனர். உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த தொழில்நுட்பத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக மாஸ்டர்கார்டு, விசா, ரூபே போன்ற பணப்பரிவர்த்தனை நெட்வொர்க்குகளுடன் மியூஸ் வியரபிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்கள் கே.எல்.என்.சாய்பிரசாந்த், கே.ஏ.யஜீந்திர அஜய் ஆகியோர் கூறும்போது, ‘‘மேக்இன் இந்தியா பிரச்சாரத்தின்கீழ் ‘ஸ்மார்ட் ரிங்’ முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது. செப். 27 முதல் சர்வதேச அளவிலும், இந்தியாவில் அக்.25 முதல் விற்பனைக்கு வரவுள்ளது’’என்றனர்.