தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்ததெல்லாம் சரிதான். ஆனால் தமிழக பாஜகவோ அதிமுகவை தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் வேலையில் இறங்கி வருகிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியாமல் ஒரு கட்சித் தொண்டர்களுக்கும் திகைத்து வருகின்றனர்.
பாஜக – அதிமுக மோதல்!மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட்டு எம்.எல்.ஏ, எம்பிக்களை பெறும் சூழல் உருவாகிவிடவில்லை. பழைய தேர்தல் ரிசல்டுகளை எடுத்துப் பார்த்தால் இதுதான் நிலை. அப்படியிருக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டை அதிகமுறை ஆண்ட கட்சியான அதிமுகவை கூட்டணிக்குள் இருந்து கொண்டே தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அதிமுக மாநாடு – அண்ணாமலை விமர்சனம்!பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்ற மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் குறித்து விசாரிக்கையில், இதில் பேசிய அண்ணாமலை, அதிமுக மாநாடு பிரம்மாண்டம் என்று சொல்ல முடியாது. அங்கு 90 சதவீதம் பேர் காசு கொடுத்து அழைத்துவரப்பட்டவர்கள். அவர்களது வாக்கு வங்கியும் அதிகரிக்கவில்லை என்று கூறியதாக சொல்கிறார்கள்.
எடப்பாடியிடம் கேட்ட கேள்வி!இந்த தகவல் எடப்பாடியின் காதுக்கும் எட்டியுள்ளது. பாஜகவினர் தொடர்ந்து சீண்டி வரும் போதும், கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் தொடர்ந்து அந்த கட்சிக்கு ஆதரவாகவே எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அண்மையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஒற்றைத் தலைமையாக உங்கள் கையில் அதிமுக வந்துவிட்டதே இன்னும் ஏன் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பாஜகவுக்கு வக்காலத்து வாங்கிய எடப்பாடிஅதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் மிகப்பெரிய கட்சி. 2 கோடி பேர் இருக்கும் கட்சி. எங்களுக்குனு ஒரு விருப்பம் இருக்கும். ஏன் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாதா? பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? 1999ஆம் ஆண்டு இதே பாஜகவோட திமுக கூட்டணி வச்சாங்களா இல்லையா?” என்று பதில் கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்காக பேசி வரும் நிலையில் அதிமுக மாநாட்டை பற்றி அண்ணாமலை விமர்சித்துள்ளதாக வந்த தகவல் எடப்பாடியை மீண்டும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.
அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா?
மக்களவைத் தேர்தல் வெற்றி என்பது அதிமுகவை விட பாஜகவுக்கு தான் மிக முக்கியம். அப்படியிருக்கையில் பாஜக தொடர்ந்து அதிமுகவை சீண்டிப்பார்த்து வருவதும், ஓபிஎஸ் – டிடிவி தினகரன் ஆகியோரோடு மறைமுக பேச்சுவார்த்தையில் இருப்பதும் எடப்பாடி பழனிசாமி தரப்பை தொந்தரவு செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இரு கட்சிக்கும் இடையே பரஸ்பர புரிதல் ஏற்படவில்லை என்றால், ஒரு கட்சியின் வாக்கு மற்றொரு கட்சிக்கு டிரான்ஸ்ஃபர் ஆகாது, இதனால் கூட்டணி வைப்பதால் எந்த நன்மையும் அந்த கட்சிகளுக்கு ஏற்படாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.