கைத்தொழில் அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து நாடு முழுவதும் வணிக விஸ்தரிப்பை மேற்கொள்ளும் நோக்கில் இன்றைய தினம் (01.09.2023) யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டை நிகழ்வை மேற்கொள்கின்றது.
இவ் ஆரம்ப நிகழ்வு கௌரவ கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில் யாழ் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
மேலும், இந்நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர , யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜன் , வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் , துறைசாா் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு வடமாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் முதல் முறையாக இடம்பெறுவதோடு குறைந்த மட்டத்தில் இயங்கும் கைத்தொழில் நிறுவனங்களை விருத்தி செய்யும் வகையிலும், கைத்தொழில் பேட்டை நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இடம்பெறுவதோடு, கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், கட்டியெழுப்புதல் மற்றும் மேம்படுத்துதல், ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திப் பொருட்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடனும் இடம்பெறுகிறது.
நாட்டின் தற்போதுள்ள கைத்தொழில் முயற்சி 15% உள்ள நிலையில் இதனை 2030 ஆம் ஆண்டில் 25 %மாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளாக இவை எதிர்பார்க்கப்படுகின்றது .
இந்நிகழ்வானது செப்ரெம்பர் 1,2, மற்றும் 3 ஆம் திகதிகள் வரை தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.