நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வியாழக்கிழமை வெளியான இத்திரைப்படம் 11,12, 13, 14 மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என சரியான விடுமுறை வீக்கெண்டில் திரைக்கு வந்தது இப்படத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பாக அமைந்தது. இதனால் அந்த வீக்கெண்டில் ஒற்றை டைகராகக் களமிறங்கி பாக்ஸ் ஆப்ஸில் கலக்கியது ‘ஜெயிலர்’ திரைப்படம். மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் என இருபெரும் நடிகரின் ஒரிரு காட்சிகளே திரையைத் தெறிக்க விட பல மொழிகளில் பெரும் வரவேற்பையும், வசூலையும் அள்ளிக்குவித்தது இப்படம்.
இந்நிலையில் இன்று ரஜினியின் வீட்டிற்கு நேரில் சென்ற தயாரிப்பாளர் கலாநிதிமாறன், பிஎம்டபிள்யூ கார்களிலேயே உயர் ரக கார்களான ‘Bmw x7’ மற்றும் ‘Bmw i7’ கார்களை ரஜினி முன் நிறுத்தி, ‘இரண்டு கார்களில் எதுவேண்டுமோ எடுத்துக்கோங்க’ என்று சர்பிரைஸ் கொடுத்தார். ரஜினியுன் சுமார். 1.20கோடி மதிப்பிலான ‘Bmw x7’ காரை தேர்வு செய்து பெற்றுக்கொண்டார். மேலும் 100கோடி மதிப்பிலான செக்கையும் ரஜினியிடம் வழங்கினார் கலாநிதிமாறன்.
இதையடுத்து இந்தச் செய்தியின் அனல் அடங்குவதற்குள் இயக்குநர் நெல்சனை வரவழைத்து, அவருக்கு முன்னாலும் நான்கு உயர் ரக சொகுசு கார்களை நிறுத்தினார். அதில், சுமார் ரூ.1.40 கோடி மதிப்பிலான ‘Porsche’ காரை தேர்வு செய்து பெற்றுக் கொண்டார் இயக்குநர் நெல்சன். மிகப்பெரிய தொகை கொண்ட செக்கும் அவருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.