காமன் மேனுக்கும் காவல் அதிகாரிக்கும் நடக்கும் ஈகோ மோதலை பீல் குட் படமாகத் தந்தால் அதுதான் இந்த `லக்கி மேன்’.
சிறு வயதிலிருந்து அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று ஒதுக்கி வைக்கப்படுபவராக இருக்கிறார் முருகன் (யோகி பாபு). ரியல் எஸ்டேட் புரோக்கராக இருக்கும் அவர், நகர வாழ்வில் தன் மனைவி தெய்வானை (ரேச்சல் ரெபக்கா) மற்றும் மகன் தமிழோடு (சாத்விக்) வீட்டு வாடகை கூட கட்ட முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறார். ஓட்டை வண்டியை வைத்துக் கொண்டு திண்டாடும் அவருக்குத் திடீரென சிட்பண்ட் அதிர்ஷ்ட குலுக்களில் கார் ஒன்று பம்பர் பரிசாகக் கிடைக்கிறது. அதன் பின்னர் மெல்ல அவரது கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போக ஆரம்பிக்கின்றன.
மறுமுனையில் தனது பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு (வீராவுக்கும்) முருகனுக்கும் அந்த காரை மையமாக வைத்து உரசல்கள் ஏற்படுகின்றன. இந்த ஈகோ சண்டையினால் அவர்கள் வாழ்வில் என்னவெல்லாம் நடிக்கிறது என்பதை காமெடி கலந்து கொடுக்க முற்பட்டு இருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.
குடும்பச் சூழலில் சிக்கித் தவிக்கும் நபராகவும், கார் வந்த பின்னர் முன்னேறிச் செல்லும் நபராகவும் தனது பாத்திரத்தின் வித்தியாசங்களைச் சிறப்பாகக் காட்டிள்ளார் யோகி பாபு. எந்தச் சூழலாக இருந்தாலும் சிரிக்க வைக்கும் முயற்சியை மட்டும் விட்டுவிடவில்லை. பல இடங்களில் அது வேலையும் செய்திருக்கிறது. கோபத்தையும், அன்பையும் மாறி மாறிப் பிரதிபலிக்கும் குடும்ப பெண்ணாக வரும் ரேச்சல் ரெபக்கா கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். பல இடங்களில் யோகி பாபுக்கு நிகராக காமெடியிலும் ஸ்கோர் செய்துள்ளார். அடுத்து அப்பாவியான முகபாவனையாலும், குறும்புத்தனத்தாலும் இந்தக் குடும்பத்தை மேலும் ரசிக்க வைக்கிறார் குழந்தை நட்சத்திரம் சாத்விக்.
நேர்மையான அதிகாரியாக வரும் வீரா, தனது பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முற்பட்டாலும், கதாபாத்திரத்தில் இருக்கும் “நல்லவரா, கெட்டவரா” என்ற குழப்பமான நிலை அவரது நடிப்பிலும் பிரதிபலிக்கிறது. யோகி பாபுவின் நண்பராக படம் முழுக்கப் பயணிக்கும் அப்துல் லீ-க்கு இது முக்கியமான பாத்திரம், அதை திறம்படச் செய்துள்ளார். வீடு ஓனராக வரும் ‘டெம்பிள் மங்கிஸ்’ தாவூத்தின் கதாபாத்திரமும் சிரிக்க வைக்கிறது. கார் ஓட்ட பயிற்சித் தருபவராக வரும் ஆர்.எஸ்.சிவாஜி “ஆரம்பிக்கலாங்களா” எனப் பேசும் வசனம் “கலகல”.
படம் ஆரம்பித்த சில இடங்களில் காமெடி என்கிற பெயரில் வெறுப்பேற்றி ரிவர்ஸ் கியரில் சென்றாலும், திரைக்கதையினுள் ‘காரை’ கொண்டு வந்து சட்டென கியரை மாற்றி முன்னோக்கி நகர வைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால். இதில் கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் காட்சிகள், அந்த காரினால் ஏற்படும் மாற்றங்கள் என அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எபிசோடுகள் ரசிக்க வைக்கின்றன. இதற்கு நடுவில் வீராவின் காட்சிகள் கதையின் மையத்திற்குத் தேவை என்றாலும் வேகத்தடை போல அமைகின்றன.
உதாரணத்திற்குச் சில காட்சிகளில் நேர்மறையாகவும், அடுத்த சில காட்சிகளில் எதிர்மறையாகவும் மாறி மாறி “மூட் ஸ்விங்”கில் அந்தரத்தில் பறக்கிறது அக்கதாபாத்திரம். இரண்டாம் பாதியில் கார் காணாமல் போவது போல் திரைக்கதையில் சுவாரஸ்யமும் காணாமல் போகிறது. அதே போல வீராவுக்குப் பெண் பார்க்கும் காட்சியும், அவர்கள் சந்திக்கும் காதல் காட்சியும் படத்தில் எதற்கு வைத்தார்கள் என்பது படம் முடிந்தும் தெரியவில்லை. இது சாதாரண காமெடி படம் இதில் லாஜிக் தேவை இல்லை என்கிற பட்சத்தில், “என்கவுன்டர்” மாஸ் பிஜிஎம் பில்டப்புகள், பின்னர் என்கவுண்டருக்கு எதிரான மனநிலை என்பதெல்லாம் இந்த கதைக்கு தேவையில்லாத ஆணிகள். காரை வைத்திருப்பதாகச் சொல்லி பணம் பறிக்கும் கும்பலின் காட்சியும் தேவையற்ற திணிப்பே!
இரவு நேரக் காட்சிகளைப் படம்பிடித்ததில் ஒளிப்பதிவாளர் சந்தீப் கே.விஜயின் ஒளியுணர்வு பிரமாதமாக இருக்கிறது. குறிப்பாக யோகி பாபுவின் சிறிய வீட்டிற்குள் வைக்கப்பட்ட காட்சி கோணங்களிலும், கலர் பேலட்டிலும் நேர்த்தியான வடிவமைப்பு வெளிப்படுகிறது. பின்னணி இசையில் வழக்கம்போல தனது ‘பீல் குட்’ இசையை வழங்கியுள்ளார் ஷான் ரோல்டன். அவரது குரலில் வரும் “எதுதான் சந்தோஷம்“ என்ற பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பிரதீப் குமார் குரலில் வரும் மற்றொரு பாடலான “ஒரு வரி காதலு”ம் ரசிக்க வைக்கிறது. வசனங்கள் “லட்டு பூந்தி” என ஆரம்பத்தில் கிரிஞ்ச் செய்தாலும், “சாதாரண சாமானிய மனிதன்தான் சூப்பர் ஹீரோ” என்ற வசனம் பாராட்ட வைக்கிறது. அந்த ஸ்ட்ரீட் லைட் காமெடியும் ரொம்ப பழசு சாரே! படத்தொகுப்பாளர் ஜி.மதன் இரண்டாம் பாதியில் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம். கலை இயக்குநர் சரவணன் வசந்த் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக வலிமையான படமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வலுவிழந்த திரைக்கதையினால் ‘லக்கி மேன்’ சற்றே சறுக்கி அன்-லக்கி மேனாகிறார். அதே நேரத்தில் சில பல நகைச்சுவை காட்சிகளும், பீல் குட் காட்சிகளும் வேலை செய்து இருப்பதினால் ஒட்டுமொத்தமாக ஒரு கலவையான உணர்வினைத் தருகிறது இந்த ‘லக்கி மேன்’.