விஜயலட்சுமி விவகாரம்.. "நீங்க ரொம்ப ரசிக்கிறீங்களே ஏன்".. நான் புகார் தரட்டுமா..? சீமான் ஆவேசம்

சென்னை:
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வியெழுப்பிய போது சீமான் சற்று ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக தனது புகாரில் அவர் கூறியிருக்கிறார். இதுவரை பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் சீமானை திட்டியும், ஆபாசமாக பேசியும் வீடியோ பதிவிட்டு வந்த விஜயலட்சுமி முதன்முதலாக சட்டப்பூர்வமான நகர்வை மேற்கொண்டிருக்கிறார்.

இதனிடையே, இந்த புகாரின் பேரில் போலீஸார் நேற்று விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நீதிபதியிடம் விஜயலட்சுமி விரைவில் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீமானுக்கு எதிரான ஆதாரங்களை விஜயலட்சுமி சமர்ப்பிக்கும் பட்சத்தில் கைது நடவடிக்கை வரை கூட செல்லலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர் அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:

நிருபர்களிடம் ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன். தயவுசெய்து நல்ல கேள்விகளை கேளுங்கள். என் மீதான அந்தக் குற்றச்சாட்டை உண்மை என்று நம்பினால், இன்றைக்கு என்னுடன் லட்சக்கணக்கான தம்பிகளும், தங்கைகளும் எப்படி என்னை பின்தொடர்வார்கள்? அவதூறுககு அஞ்சுபவன் அற்ப வெற்றியை கூட தொட முடியாது. எதைக் கண்டும் நான் அஞ்சுபவன் அல்ல. அதே சமயத்தில், ஒரு விஷயத்தை நீங்க கவனிச்சீங்களா? ஏன் சரியாக தேர்தல் நேரங்களில் மட்டும் எனக்கு எதிராக இந்த பேச்சுகள் வருகிறது? சிந்திக்கணும். 11 வருடங்களாக ஒரே குற்றச்சாட்டையா வைப்பது?

நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு ஒரு பொண்ணு என்னை ஏமாத்திட்டு போயிருச்சுனு வெச்சுக்கோங்க. இன்னைககு அந்தப் பொண்ணு ஒரு புருஷன் கூட வாழ்ந்துட்டு இருக்கு. இப்போ நான் வந்து நின்னுட்டு, அந்தப் பொண்ணு என்னை ஏமாத்திட்டு போயிருச்சுனு நான் சொன்னா நீங்க காரி துப்பி செருப்பை கழட்டி அடிப்பீங்களா இல்லையா.. ஆனால் என் மீது இப்படி புகார் வரும் போதெல்லாம் ஊடகங்கள் ஏன் இப்படி ரசிக்கிறீங்க? எனக்கு ஒரு குடும்பம் இருக்கு. ரெண்டு பிள்ளைகள் இருக்குனு உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் போது இப்படி பேசுறதை நீங்க ஊக்கப்படுத்துறீங்களே..

இன்னைக்கு என் மீது புகார் கொடுத்துருக்காங்க. எனக்கு முன்னாடி 5 பேர் மீது இதுபோல புகார் கொடுக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? உங்க வாட்ஸ் அப்பை தாங்க.. நான் காட்டுறேன். 5 பேர் பற்றி வெவ்வேறு மொழிகளில் பேசப்பட்டிருக்கிறது. எனவே இது மாதிரி கேள்வி கேக்காதீங்க. ஒரு இலக்கை நோக்கி செல்பவனிடம் அவசியமான கேள்விகளை கேட்கணும். அவசியமற்ற கேள்விகளை தவிர்க்கணும். இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.