சமீபத்தில் நிலவில் கால்பதித்த சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இந்நிலையில் நிலவுக்கான தன்னுடைய வெற்றிப்பயணத்தை தொடர்ந்து சூரியனை ஆராய நாளை (செப்டம்பர் 2) ஆதித்யாயன் என்ற விண்கலத்தை ஏவ உள்ளது இஸ்ரோ. அதற்கான கவுன்டடௌன் இன்றிலிருந்து தொடங்கவும் பட்டுள்ளது. இந்த சூரிய பயணம் குறித்து அதன் சுவாரஸ்யமான தகவல்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆதித்யா எல்-1 விண்கலம்சூரியனை விண்வெளியில் L1 லேக்ரேஞ்சில் இருந்தபடி, ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்படும் முதல் விண்கலம் ஆதித்யா எல்-1. இது செப்டம்பர் 2ம் தேதி 11.50 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது.
ஆதித்யா L1ஐ சுமந்து செல்லும் ராக்கெட்சூரிய பயணத்தில் ஈடுபடப்போகும் ஆதித்யா L1 விண்கலத்தை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) ராக்கெட் நாளை விண்ணில் சுமந்து செல்ல இருக்கிறது.இது விண்கலத்தை பூமியின் கீழ்சுற்றுவட்ட பாதைக்கு கொண்டு செல்லும். பின்னர், விண்கலம் L1 புள்ளியை நோக்கி உந்தி தள்ளும்.
லேக்ரேஞ்ச் புள்ளியில் இருந்து ஆய்வுசூரியன் தான் சூடாக இருக்குமே பிறகு எப்படி அதன் அருகில் செல்ல முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழலாம். அதற்காகத்தான் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் பூமியிலிருந்து 1.5மில்லியன் தொலைவில் இருக்கும் சூரிய ஒளிவட்டப்பாதையில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும். இந்த இடத்தை லேக்ரேஞ்ச் புள்ளி என்று அழைக்கிறோம்.
லேக்ரேஞ்ச் புள்ளி என்றால் என்ன?ஜோசப் லூயிஸ் லேக்ரேஞ்ச் என்ற வானியிலாளர் தான் சூரியனின் வெளிவட்ட சுற்றுப்பாதையில் சூரிய கிரகணம் உள்ளிட்ட எதாலும் பாதிப்பு ஏற்படாமல் சூரியனை கவனிக்க கூடிய புள்ளிகளை கண்டறிந்தார். அதைத்தான் லேக்ரேஞ்ச் புள்ளி என்று அழைக்கிறோம். இதில் தற்போது ஆதித்யா L1 இந்த லேக்ரேஞ்ச் புள்ளியின் L1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்யும்.
ஆதித்யா L1 என்ன ஆய்வு செய்யும்?முதலில் இந்த L1 பகுதியை ஆதித்யா L1 அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகுமாம். இந்த விண்கலத்தில் ஏழு பேலோடுகள் பொறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு சூரியனை நேரடியாகவும், மூன்று பேலோடுகள் L1 புள்ளியில் காணப்படும் துகள்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும். சூரியனின் செயல்பாடு, வானிலை மாற்றங்கள், சூரிய மேல் வளிமண்டல இயக்கவியல் பற்றிய ஆய்வு உள்ளிட்ட பல்வேறு சூரியன் சார்ந்த ஆய்வுகளை இந்த விண்கலம் செய்ய உள்ளது. குரோமோஸ்பிரிக் மற்றும் கரோனல் வெப்பமாக்கல், பிளாஸ்மா இயற்பியல், சூரிய துகள்கள் குறித்த ஆய்வு, சூரிய கொரோனா குறித்த ஆய்வு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1.
ஆதித்யா L1 – ல் இடம்பெற்றுள்ள முக்கிய கருவிகள்இதில் கொரோனா/இமேஜிங் & ஸ்பெக்ட்ரோஸ்கோபிக்காக எமிஷன் லைன் கரோனாகிராஃப்(VELC), ஃபோட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் இமேஜிங்- நேரோ & பிராட்பேண்ட்க்காக சூரிய புற ஊதா இமேஜிங் தொலைநோக்கி (SUIT), சோலார் குறைந்த ஆற்றல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (SoLEXS), உயர் ஆற்றல் L1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்(HEL1OS), ஆதித்யா சூரியக் காற்று துகள் பரிசோதனை (ASPEX), ஆதித்யாவிற்கான பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு (PAPA), மேம்பட்ட முக்கோண உயர் தெளிவுத்திறன் டிஜிட்டல் காந்தமானிகள் ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளன.