I.N.D.I.A: 14 பேர்கொண்ட கமிட்டி அமைப்பு; டெல்லியில் அடுத்த கூட்டம்… மும்பை கூட்டத்தில் நடந்ததென்ன?

மும்பையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் இன்று நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் இன்று மாலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டணிக்கு புதிய அமைப்பாளர் மற்றும் லோகோ அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டுமே நடக்கவில்லை. காலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்பட அறிமுகத்துக்குப் பிறகு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள்

அதில் வரும் மக்களவைத் தேர்தலில் 28 கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகள் கூடுமானவரை அனைத்து தொகுதியிலும் இணைந்துபோட்டியிடுவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு தொகுதி பங்கீடு விவகாரத்தில் கொடுத்து வாங்குவது என்ற கொள்கையைப் பின்பற்றவும், தொகுதி பங்கீட்டுக்கான பணிகளை உடனே தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்டணியை வழிநடத்த 13 பேர் கொண்ட கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் வேணுகோபால், சரத் பவார், தி.மு.க-வின் டி.ஆர்.பாலு, ஹேமந்த் சோரன், சஞ்சய் ராவத், தேஜஸ்வி, அபிஷேக் பானர்ஜி, ஓமர் அப்துல்லா உட்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ இடம் பெறவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர்கள்

தாங்கள் கமிட்டியில் இடம்பெற்றால் பெரியண்ணாவாக நடந்துகொள்வதாக சிறிய கட்சிகள் என்று கருதும் என்று நினைத்து, இருவரும் கமிட்டியில் பங்கேற்க மறுத்துவிட்டனர். வரும் மக்களவைத் தேர்தலில் `ஜூடேகா பாரத், ஜீதேகா இந்தியா’ என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்கவும் முடிவு செய்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் பிரச்னையை முன்னிலைப்படுத்தி பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைய கூட்டத்தில் நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து விரைந்து முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

தொகுதி பங்கீடு மாநில அளவில் தொடங்கப்படவேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான தலைவர்கள் மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட்டால், பா.ஜ.க-வால் நிச்சயம் வெற்றிபெற முடியாது. எனவே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றியணையவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதோடு வழக்கமான அதானி பிரச்னையை எழுப்பவும் ராகுல் காந்தி தயங்கவில்லை. பேசி முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்றவர் மீண்டும் வந்து, “சீனா, இந்தியாவின் லடாக் எல்லையில் இந்திய பகுதியை அபகரித்திருக்கிறது. ஆனால், இதனை பிரதமர் மோடி மறைகிறார்” என்று தெரிவித்தார்.

இதில் பேசிய லாலு பிரசாத் யாதவ், “பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறது. எனது பணம் உட்பட எதிர்க்கட்சிகளின் பணம் ஸ்விஸ் வங்கியில் இருப்பதாக பா.ஜ.க சொன்னது. அந்தப் பணத்தை எடுத்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று சொன்னார்கள். அதை நம்பி நானும் ஒரு வங்கிக் கணக்கு திறந்தேன். எனது குடும்பத்தில் மட்டும் 11 வங்கிக் கணக்குகள் இதற்காக திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் யாருக்கும் பணம் வரவில்லை. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததை பிரதமர் மோடி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு பணிக்காகவும் நான்கு துணை கமிட்டிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்க ஒவ்வொரு கட்சியும் தேவையான ஆலோசனைகளை தயாரிக்கும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்காமல் மம்தா பானர்ஜி புறப்பட்டுச் சென்றுவிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பேசி முடித்தவுடன் டி.ஆ.பாலுவுடன் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து புறப்பட்டுவிட்டார். இது தவிர ஒவ்வொரு தலைவரும் பேசி முடித்தவுடன் புறப்பட்டுச் சென்று கொண்டே இருந்தனர். அனைத்து தலைவர்களும் பேசி முடித்த பிறகு, நிருபர்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பாதிப்பேர் பேசி முடித்தவுடன் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் நிருபர்கள் அதிருப்தியடைந்தனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜாவிடம் நாம் பேசியபோது, “கூட்டத்தில் பிரதம வேட்பாளர் குறித்தோ அல்லது இந்தியா கூட்டணியின் அமைப்பாளர் குறித்தோ பேசப்படவில்லை.

எதிர்வரும் தேர்தல் குறித்தும், எப்படி இணைந்து சந்திப்பது என்பது குறித்தும் மட்டுமே பேசப்பட்டது” என்று தெரிவித்தார். அடுத்த கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று சுப்ரியா சுலே தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் எந்தவிதமான எதிர்கால திட்டமோ செயல் திட்டமோ இல்லை என்று பா.ஜ.க-வின் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.