ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுகவின் பெயரை வைத்தே உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவில் ஆக்டிவாக செயல்படும் அமைச்சராகவும், நிர்வாகியாகவும் மாறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் தெரிவித்த அரசியல் கருத்துகள் அனைத்தும் கவனிக்கத் தகுந்தவையாக மாறியுள்ளன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக குறித்து உதயநிதி சொல்லும் பதில்கள் தக் லைஃபாக உள்ளதென திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி தொடங்கி அதிமுக தலைவர்கள் பலரும் உதயநிதியை குறிவைத்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக மீது மீண்டும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் உதயநிதி.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு, “அதிமுக ஆட்சியில் இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்போது ஆதரவு தெரிவிக்கிறார்கள். மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது அதிமுக.
அடிக்கடி தோல்விகள் சந்தித்தால் கஷ்டமாக இருக்கும், ஒரே நேரத்தில் தோல்வியை எதிர்கொண்டால் அத்துடன் முடிந்துவிடுமல்லவா? திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே இந்த திட்டத்தை எதிர்த்தது. இப்போதும் எதிர்க்கிறோம். நாங்கள் இருக்கும் வரை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதையெல்லாம் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு மாநில சுயாட்சிக்கு எதிராக அதிமுக செயல்படுகிறதோ என்ற கேள்விக்கு, “அது அண்ணாவின் பெயர் என்று யார் சொன்னது? அதிமுகவில் அ எழுத்து அமித் ஷாவின் பெயர்” என கலாய்த்து தள்ளினார்.
காலை உணவுத் திட்டத்தை சீமான் விமர்சித்தது பற்றி கருத்து தெரிவித்த அவர், “காலை உணவுத் திட்டம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பை விட மாணவர்கள் கூடுதலாக வருகிறார்கள். நான் பல மாவட்டங்களில் ஆய்வு செய்து உணவை சாப்பிட்டு, எத்தனை மாணவர்கள் சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் ஆய்வு செய்துள்ளேன். 17 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுகிறார்கள். ஆனால், இதுதொடர்பாக வன்மத்துடன் செய்தி வெளியிட்ட இதழுக்கு தமிழக மக்கள் மத்தியில் எப்படி எதிர்ப்பு எழுந்தது என அனைவருக்கும் தெரியும். ஆகவே, யாராக இருந்தாலும் மாணவர்களுடன் சென்று அமர்ந்து உணவை சாப்பிட்டு விட்டு அதன்பிறகு கருத்து கூறுங்கள்” என்றார்.
இதனிடையே அதிமுகவை அமித்ஷா திமுக என விமர்சனம் செய்தது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.