அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக தொடக்க நாளையொட்டி செப்.14-ம் தேதி பொதுக்கூட்டம்

சென்னை: தேமுதிக தொடக்க நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் செப்.14-ம் தேதி பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தேமுதிக 19-ம் ஆண்டு தொடக்க விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் தொடக்க நாள், கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஆகியவற்றை சிறப்பாககொண்டாடுமாறு கட்சி நிர்வாகிகள்,தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்சிக் கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவற்றை நடத்தி, 14-ம் தேதி மாலை 4 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்துகொள்பவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

செங்கல்பட்டு மாவட்ட பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்கிறார்.அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சி அவைத் தலைவர் வி.இளங்கோவன், திருவண்ணாமலை – துணை செயலாளர் பார்த்தசாரதி, காஞ்சிபுரம் – இளைஞர் அணி செயலாளர் கு.நல்லதம்பி, சென்னை – இளைஞர் அணி துணை செயலாளர் எம்விஎஸ் ராஜேந்திரநாத் ஆகியோர் தலைமை வகித்து பேச உள்ளனர்.

இவ்வாறு 38 மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்குபெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கான செயல்பாட்டுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.