இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, அங்குள்ள, 1,200 ஏக்கர் அம்பன்தோட்டா துறைமுகத்தை, சீனா, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுள்ளது. அதை வைத்து, அங்கு பெரிய கப்பல் தளம் கட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது. அங்கு, கடல் அட்டை பண்ணைகளையும் அமைத்து வருகிறது.
இவற்றை வைத்து, தென்கிழக்கு ஆசியாவிலும், தென் சீன கடல் பகுதியிலும் தன் ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், பூகோள அரசியலில், பல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது, அமெரிக்காவுக்கு உறுத்தலாக உள்ளது. இதனால், இலங்கையில், சீனாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட விரும்புகிறது. சில தினங்களுக்கு முன், இலங்கைக்கான அமெரிக்க துாதர் ஜீலி சங், வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
அங்கு வாழும் தமிழர்கள், தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.,க்களை சந்தித்தார். இலங்கையில் சீன ஆதிக்கம் குறித்த அவர்களின் கருத்துகளை பதிவு செய்தார். இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் கிரிஸ் வான் ஹொலென், அதிபர் உள்ளிட்ட பலரையும் சந்தித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதாரம் தான் பிரச்னை என்பதால், அதை சரி செய்யும் பணிகளில் அமெரிக்கா ஈடுபடும் என தெரிவித்து, அதிபர் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய பிரமுகர்களை, தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க செனட் உறுப்பினர் கிரிஸ் வான் ஹொலென், ‘சர்வதேச அளவில் நீதி கிடைக்க, அமெரிக்கா உதவி செய்யும்’ என்று உறுதி அளித்தார். இந்த சூழ்நிலையில் தான், சீனாவின் உளவு கப்பலான, ‘ஷீ யான் 6’ இலங்கை வர அனுமதி கொடுக்கப்படவில்லை. அதற்கு, அமெரிக்க அழுத்தமும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement