காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கல்வித் துறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ‘அட்சய பாத்ரா’ என்ற அறக்கட்டளையுடன் கல்வித் துறை செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், புதுச்சேரியில் மட்டும் அந்த அறக்கட்டளை மதிய உணவை வழங்கி வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் கல்வித் துறை மூலமே மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், காலை உணவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதி பெயரில், அப்போதைய புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி 2020-ம் ஆண்டு நவ.12-ம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை புதுச்சேரியில் தொடங்கி வைத்தார். இட்லி, சாம்பார், கேசரி என தொடங்கப்பட்ட திட்டம் ஒரு நாள் மட்டுமே நடைமுறையில் இருந்தது. பின்னர் அத்திட்டம் தொடரவில்லை.
இதனிடையே, பள்ளிகளில் காலை வேளையில் மாணவர்களுக்கு ரொட்டி, பால் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் தற்போது ரொட்டிகள் வழங்கப்படுவதில்லை. பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பால் மட்டும் வழங்கப்படுகிறது. இதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அன்னப்பூரணா என்ற அறக்கட்டளை மூலம் புரோட்டீன் பவுடர் கலந்த பால் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கண்ணாப்பூர் அரசு தொடக்கப் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.தேவேந்திரன் கூறியது: காலை உணவு திட்டம் புதுச்சேரியில் தொடங்கி ஒருநாளாவது நடைமுறையில் இருந்த நிலையில், காரைக்காலில் இத்திட்டம் தொடங்கப்படவே இல்லை. தற்போது அருகில் உள்ள தமிழக மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், இங்கும் அத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் காலையிலேயே வேலைக்கு செல்லக்கூடிய ஏராளமான தொழிலாளர்கள், கூலி வேலை செய்வோரின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்டால் அத்தகைய பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும். பாலுடன் சேர்த்து ரொட்டி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. ரொட்டி வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது: புதுச்சேரியில் கடந்த அரசால் இத்திட்டம் தொடங்கப்பட்டு, கரோனா பரவல் காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.தமிழகத்தில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. அதை பார்த்தாவது புதுச்சேரியில் இத்திட்டத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள முதல்வர் என்.ரங்கசாமி அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.