ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம்.. அன்றே கணித்த கருணாநிதி.. தீயாக பரவும் ஆடியோ.. ஓபனா சொல்லிருக்காரு

சென்னை:
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், முன்னாள் திமுக தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான கருணாநிதி இந்த திட்டத்தை வெகுவாக ஆதரித்து பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிட்டியையும் அமைத்துள்ளது. இந்த திட்டம் நடைமுறையாகும் பட்சத்தில், நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்தே சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெறும்.

உதாரணமாக, தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த சமயத்தில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் கொண்டு வரப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகமும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதாவது 5 ஆண்டுகளுக்கு பதிலாக திமுக அரசின் ஆட்சிக்காலம் 3 ஆண்டுகளிலேயே நிறைவடைந்து விடும்.

இதனால் திமுக இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. திமுக மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள பல கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஒரே தேர்தல் திட்டத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி ஆதரவு தெரிவித்து பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் பேசும் கருணாநிதி, “1971-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக பொதுக்குழு கூடி நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் இணைத்து நடத்துவது நலம் என்றும், ஒரே ஆண்டின் தொடக்கத்திலும், முடிவிலும் இரண்டு தேர்தல்களை சந்திக்க வேண்டியதை தவிர்க்க முடியும் எனவும், இரட்டிப்பு செலவு ஆவதை தவிர்க்கலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றினோம்.

அரசு அதிகாரிகள் இரண்டு முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் வளர்ச்சிப் பணிகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலைமையை தவிர்க்க 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவது என்று பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. இன்றைய நிலையில், ஜனநாயக முறையில் பொதுத்தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்றும், அந்த தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கு ஏற்ப சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

புதிய முன்னறிவிப்பை வழங்கி, வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனவே நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி பிரதமருக்கு நம் கழகத் தோழர்கள் கடிதம் எழுதுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என கருணாநிதி அன்றைக்கு பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.