செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் என்ற அறிவிப்பு வெளியானபோதே, இந்தக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பா.ஜ.க அறிமுகப்படுத்தப்போவதாக பேச்சுக்கள் எழுந்தது. அதற்கேற்றவாறு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியங்கள் தொடர்பாக ஆராய குழுவும் அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தபோதும், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது தேர்தல் செலவுகள் உட்பட பல்வேறு வேலைகளை குறைக்கும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்றும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறிவருகின்றன.
மேலும், குழு அமைக்கப்பட்டது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க இப்போதைக்கு குழு மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு அறிக்கையைத் தயார் செய்ததும், அது பொது தளத்துக்கு கொண்டுவரப்பட்டு விவாதம் நடத்தப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்திலும் விவாதங்கள் நடைபெறும். எனவே இதில் விவாதங்கள் நடைபெறும் என்பதால் பதட்டப்பட வேண்டாம்” என்று நேற்று கூறினார்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்தக் குழுவில் ராம்நாத் கோவிந்த் உட்பட, எட்டு பேர் இடம்பெற்றிருக்கின்றனர். அதில் ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி ஆத்திர ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-ம் நிதிக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே சிங், சுபாஷ் காஷியாப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, விஜலன்ஸ் முன்னாள் கமிஷனர் சஞ்சய் கோதரி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.