பாட்னா: மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அக்கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நேற்று முடிவடைந்தது. இதில், மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வது, தொகுதிப் பங்கீட்டுக்கான ஏற்பாடுகளை விரைவாகத் தொடங்குவது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைந்து நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், “நாடாளுமன்றத் தேர்தலை பாஜக விரைவாக நடத்தக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் விரைவாக ஒன்றிணைந்துள்ளோம். இதனால், தற்போது பாஜக அச்சமடைந்துள்ளது. எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒரு பிரச்சினையாக இருக்காது. இது குறித்த கலந்துரையாடல் இண்டியா கூட்டணிக்குள் விரைவில் நடக்கும். மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்” என தெரிவித்தார்.
பிஹார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “பாஜக கூட்டணிக்கு வலிமையான மாற்று தேவை என விரும்புகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டே தற்போது நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தற்போது ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு முன்பாக, ஒரே நாடு ஒரே வருமான கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் பொருளாதார நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறது. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் அவர்கள் பிறகு ஒரே நாடு ஒரே தலைவர், ஒரே நாடு ஒரே கட்சி , ஒரே நாடு ஒரே மதம் என்று போய்க்கொண்டே இருப்பார்கள். இவையெல்லாம் பயனற்ற பேச்சுகள்” என தெரிவித்தார்.