சென்னை:
நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேடி தனிப்படை போலீஸார் ஊட்டி விரைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீமான் தன்னை திருமணம் செய்து பின்னர் ஏமாற்றிவிட்டு சென்றதாக கடந்த பல ஆண்டுகளாக நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு கூறி வந்தார்.
இதனிடையே, சீமானுக்கும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இருந்தபோதிலும், சீமான் தொடர்பான வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் நடிகை விஜயலட்சுமி.
ஆனால், தன் மீது விஜயலட்சுமி கூறும் புகார்கள் தொடர்பாக சீமான் பெரிய அளவில் எதிர்வினை ஆற்றாமல் இருந்தார். இந்நிலையில் தான், இரு தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் பூதாகரமானது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது புகார் அளித்தார். இதற்கு அடுத்த நாளே, நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது சீமான் மீது தான் கொடுத்த புகார்களுக்கான ஆதாரங்களையும், வாக்குமூலத்தையும் விஜயலட்சுமி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், விஜயலட்சுமி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தன் மீது புகார் கூறியதை போல மேலும் 5 பேர் மீது விஜயலட்சுமி புகார் கூறும் வீடியோக்களையும் நிருபர்களுக்கு அனுப்பினார். மேலும், தன்னை கெட்ட ராஸ்கல் எனக் கூறிக்கொண்ட சீமான், தான் வெடித்து சிதறினால் யாரும் தாங்க மாட்டீர்கள் எனவும் கூறியிருந்தார். இதனால் சீமான் – விஜயலட்சுமி விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீமான், கொட்டு மழையில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த சூழ்நிலையில், சீமானை தேடி சென்னையில் இருந்து தனிப்படை போலீஸார் ஊட்டி விரைந்திருப்பதாக சற்று முன்பு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமானை தேடி போலீஸார் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு செல்லும் போலீஸார் சீமானிடம் விசாரணை நடத்துவார்களா அல்லது நேரடியாக கைது செய்வார்களா எனத் தெரியவில்லை.