ஜவான் எடிட்டருக்கு ஷாரூக்கான் போட்ட கண்டிஷன்
ஷாரூக்கான் நடிப்பில் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படம் ஒரு நேரடி தமிழ் படம் போலவே இங்குள்ள ரசிகர்களிடம் புரமோட் செய்யப்பட்டு வருகிறது. காரணம் இயக்குனர் அட்லீ என்பது மட்டுமல்ல.. நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு என முன்னணி கலைஞர்களும் இசையமைப்பாளர் அனிருத், படத்தொகுப்பாளர் ரூபன் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளதால் இந்தப்படம் ஒரு தமிழ் படமாகவே இங்கே களமிறங்குகிறது. அதற்கேற்றபடி சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ஷாரூக்கான் கலந்து கொண்டு இதில் பங்காற்றிய தமிழ் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி தள்ளிவிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, “ஷாரூக்கான் இந்த படத்தின் படத்தொகுப்பை துவங்கும்போதே என்னிடம் இந்த படத்தில் நீளத்தை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் என்னுடைய காட்சிகளை வெட்டி விடுங்கள். ஆனால் இதில் நடித்துள்ள மற்ற நடிகர்களின் காட்சிகள் எதிலும் கை வைக்க வேண்டாம் என்று ஒரு அன்புக்கட்டளை போட்டு விட்டார்” என கூறினார்.
பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்தாலும் தாங்கள் ரசிகர்களிடம் எளிதில் பிரபலமாகலாம், அதன்மூலம் தங்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும் என நினைக்கும் பல கலைஞர்களின் காட்சிகள் படத்தின் நீளம் கருதி வெட்டி எறியப்படுவது தான் வழக்கம். ஆனால் தேவைப்பட்டால் தனது காட்சிகளை மட்டும் வெட்டுங்கள் என ஷாருக்கான் கூறியுள்ளது. அவர் மற்ற கலைஞர்களின்பால் கொண்டுள்ள அன்பையே அன்பையே வெளிப்படுத்துகிறது.