நாளுக்கு நாள் டெலிகாம் துறையின் முதல் இடத்தை பிடிப்பதற்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீட்டை இந்த துறையில் செய்து வருகின்றன. சமீபத்தில் கூட ஜியோ நிறுவனத்தின் 47வது பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். அதே சமயம் அவர்களின் முதலீட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் அதற்கேற்ற விலையையும் நிர்ணயிக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள்.
அதற்காக சமீப காலத்தில் மட்டும் பல்வேறு வழிகளில் தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளன இந்த நிறுவனங்கள். இது வாடிக்கையாளர்களின் மீது மேலும் சுமையை ஏற்றுவதாகவே அமைந்துள்ளன. அப்படி, இந்த நிறுவனங்கள் என்ன விலையை உயர்த்தியுள்ளன, அதன் அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களில் கொண்டு வந்த மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜியோவின் அடிப்படை ரீசார்ஜ் திட்டங்கள்ஜியோபாரத் போன் மற்றும் அதன் ரீசார்ஜ் திட்டங்கள் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த ரீசார்ஜ் பலன்கள் ஆகும். ஆனால், அதில் இதில் பயன்படுத்தப்படும் ஜியோ சிம்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் இது லிமிட்டெட் டிவைஸாக பார்க்கப்படுகிறது. இதன் ரீசார்ஜ் திட்டங்கள் 129 ரூபாய் விலையில் இருந்து துவங்குகிறது. இதற்கு அடுத்து ஜியோ சிம்மை நீங்கள் ஆக்டிவாக வைத்து கொள்ள வேண்டுமென்றால் அடிப்படையாக 149ரூபாயில் இருந்து ரீசார்ஜ் செய்யலாம். இதன் வேலிடிட்டி 20 நாட்களே ஆகும். இதில் ஒரு நாளைக்கு ஒரு GB டேட்டா வீதம் 20 நாட்களுக்கு 20GB டேட்டா, அன்லிமிட்டட் காலிங் வசதி மற்றும் தினம் நூறு மெஸேஜ் ஆகிய பலன்கள் அடங்கும். இதே ரீசார்ஜ் திட்டம் இதற்கு முன்பு 14 நாட்கள் வேலிடிட்டியுடன் 129 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் அடிப்படை ரீசார்ஜ் திட்டங்கள்ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட ஒருபடி மேலே சென்று அதன் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தை 155ரூபாய் என்ற நிலையில் வைத்திருக்கிறது. ஏர்டெல் சிம்மை நீங்கள் ஆக்டிவாக வைத்து கொள்ள வேண்டுமென்றால் 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இதே திட்டம் இதற்கு முன்னாள் 99 ரூபாய்க்கு செய்யப்பட்டு வந்தது. இந்தாண்டின் தொடக்கத்தில் அந்த திட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த 155 ரூபாய் திட்டத்தின் வழியாக 24 நாட்களும் தினம் 1GB டேட்டா, ஒரு நாளைக்கு 300 மெசேஜ், அன்லிமிட்டட் காலிங் வசதிகள் ஆகியவை வழங்கப்படும்.
வோடோஃபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டங்கள்வோடோஃபோன் ஐடியாவை பொறுத்தவரை பேசிக் பிளான் 99 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஆனால், சமீப காலமாக பகுதிக்கு ஏற்றார் போல் இதன் பலன்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி இடத்தை பொறுத்து 24 நாட்களுக்கு வேலிடிட்டியா அல்லது 15 நாட்களுக்கானதா என்று முடிவு செய்யப்படும். மேலும் 99 ரூபாய் டாக்டைம் மற்றும் 200MB டேட்டா வழங்கப்பட்டு வருகிறது.