கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் பல ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஈஷா யோகா மையத்தின் கட்டடங்கள் சட்டத்துக்கு புறம்பாகவும், யானைகளின் வழித்தடத்திலும் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுகின்றன. ஈஷா யோகா மையத்திற்கு சொந்தமான நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஈஷா யோகா மையத்திற்கு சொந்தமான கட்டடங்கள் மலைதள பாதுகாப்புக் குழுமத்திடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டன என்று தமிழக அரசின் நகரமைப்பு திட்டமிடல் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி கங்கர்வாலாவின் தலைமையிலான அமர்வு, “ஈஷாவிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்துவிட்டு, அனுமதி பெறவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நகரமைப்பு திட்டமிடல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஈஷா மையம் பத்திரிகையாளர் சந்திப்பை ஒருங்கிணைத்தது. இச்சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஈஷா சார்பாக பேசிய தினேஷ் என்பவர், “சிலை எழுப்ப நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஈஷா யோகா மையத்தில் கட்டப்பட்ட ஆதியோகி சிலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றபின்னரே எழுப்பப்பட்டது. ஈஷா யோகா மைய கட்டடங்களானது பழங்குடியினருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தோ, யானை வழித்தடங்களிலோ கட்டப்படவில்லை. இதனை வனத்துறையும் ஒப்புக்கொள்கிறது. ஈஷாவின் நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானதாக இருந்தால் அதற்கான ஆவணங்களை அரசும், ஊடகங்களும் காண்பித்தால் எங்கள் மீது தவறு உள்ளதை ஒப்புக்கொள்கிறோம்” என்றார்.
ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பழங்குடியினரின் இடங்களாக இருக்க முடியுமா? இன்றும் பல்வேறு பழங்குடி மற்றும் ஆதி திராவிடர் மக்கள் இருக்கும் நிலங்களுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை. ஆனால் நீண்ட காலமாக அங்கு அவர்கள் வசித்து வரும் பட்சத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கான இடங்களாகவே கருதப்படும். இந்நிலையில் நீங்கள் கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது? என்ற கேள்வியை விகடன் எழுப்பியது.
அதற்கு ஈஷா தரப்பில், “எங்கள் கட்டடங்கள் இருக்கும் இடம் எதுவுமே குடியிருப்பு நிலங்களல்ல. எல்லாமே விவசாய நிலங்களே. அவற்றைத்தான் ஈஷா வாங்கியுள்ளது” என்று தெரிவித்தனர்.