பரம்பொருள் விமர்சனம்: சிலைக் கடத்தல் பின்னணியில் க்ரைம் த்ரில்லர்; ரசிக்க வைக்கிறதா, ஏமாற்றுகிறதா?

சிலைக் கடத்தல் மூலம் ஆதாயம் தேட நினைக்கும் காவல் அதிகாரியும் அவருக்குத் துணையாக நிற்கும் ‘அப்பாவி’யும் தாங்கள் நினைத்தைச் சாதித்தார்களா என்பதே இந்த ‘பரம்பொருள்’.

மோசமான காவல் ஆய்வாளரான மைத்ரேயன் (சரத்குமார்), டிபார்ட்மென்ட்டுக்குள் புகையும் சிலைக் கடத்தல் விவகாரம் குறித்துத் தெரிந்துக் கொள்கிறார். அதனை வைத்து பலர் ஆதாயம் தேடுவதை அறிந்து, தானும் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். சொல்லி வைத்தாற்போல அவர் வீட்டில் திருட வரும் நாயகன் ஆதிக்கு (அமிதாஷ்) இறந்துபோன ஒரு சிலைக் கடத்தல் டீலரிடம் நீண்ட நாள் பழக்கம் இருப்பது தெரியவருகிறது. தங்கையின் மருத்துவச் சிகிச்சைக்காக ஆதிக்கும் உடனடி பணத்தேவை இருக்கவே, அவரை மிரட்டி, அவரின் தொடர்புகளை வைத்து பெரிய லெவலில் ஒரு டீல் செய்து செட்டிலாக நினைக்கிறார் மைத்ரேயன். அவரின் இந்தத் திட்டம் பழித்ததா, இல்லையா என்பதை ஒரு க்ரைம் த்ரில்லராகக் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சி.அரவிந்த் ராஜ்.

சரத்குமார், அமிதாஷ்

கதையின் நாயகர்களாக வரும் சரத்குமார், அமிதாஷ் இருவரின் பாத்திரப் படைப்புகளும் எதிரெதிர் துருவங்கள். வெளிப்படையாகப் பேசி, மிரட்டிக் காரியம் சாதிக்கும் ‘கரப்ட்’ போலீஸாக சரத்குமார், அந்தப் பாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்திப் போகிறார். மிரட்டல் பாணியையும் மிடுக்கையும் விடுத்து, சில இடங்களில் அவர் பேசும் வசனங்கள் காமெடியாகவும் ஒர்க் ஆகின்றன. அமிதாஷ் ஒரே பரிமாண நடிப்பை வழங்கியிருந்தாலும் அவரின் பாத்திரப் படைப்பும் அத்தகையது என்பதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், ரொமான்ஸ் முகபாவங்களில் இன்னும் பயிற்சி வேண்டும்.

நாயகி காஷ்மிரா பரதேசியைக் கதைக்குள் நுழைக்கவே வாலண்டியராகச் சில காட்சிகளைத் திணித்திருக்கிறார்கள். முகபாவங்களில் தேர்ச்சி இருந்தாலும் லிப் சின்க் பிரச்னைகள் ஆங்காங்கே புலப்படுகின்றன. சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தன் முத்திரையை அழுந்தப் பதிக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். வில்லன்களாக வரும் பாலகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன் தங்களின் பாத்திரங்களுக்குத் தேவையானதைச் செய்திருக்கின்றனர்.

பரம்பொருள்

க்ரைம் கதை என்றதும் பொதுவாகக் கொலை, கொள்ளை என்று ஒரு கதையை மேம்போக்காகச் சொல்லாமல், சிலைக் கடத்தல், அதன் பின்னணி, அந்த நெட்வொர்க் எப்படிச் செயல்படுகிறது, சிலைகளின் தன்மை, வரலாறு, பல நூறு கோடிகளில் பேசப்படும் டீல் என நிறைய விஷயங்களை ஆராய்ந்து, கதையில் நுழைத்து வலிமை சேர்த்திருக்கிறார் இயக்குநர். பரபர க்ரைம் நாவல் கணக்காகத் திரைக்கதை நகரவில்லை என்றாலும், ஆங்காங்கே திருப்பங்கள், எதிர்பாராத காட்சிகள், புதிதாக முளைக்கும் கதாபாத்திரங்கள் எனப் படம் சுவாரஸ்யமாகவே செல்கிறது. பாலாஜி சக்திவேல் – அமிதாஷ் – சரத்குமார் இடையே நடக்கும் அந்தப் பேரம் பேசும் காட்சியில் வசனங்களும் அது படமாகப்பட்ட விதமும் ரசிக்கவைக்கின்றன.

யுவன் சங்கர் ராஜா இசையில் ‘அசைவின்றி’ காதல் பாடல் அவரின் வின்டேஜ் வைப்ஸைத் தருகிறது. பின்னணி இசையிலும் க்ரைம், ஆன்மிகம் எனப் பலதரப்பட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒளித்துணுக்குகளைக் கோத்திருப்பதும் ரசிக்கவைக்கிறது. எஸ்.பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவு மங்கிய மஞ்சள் வெளிச்சம், இருள், சேஸிங் காட்சிகள் எனக் கதைக்குத் தேவையான அளவு உழைத்திருக்கிறது.

பரம்பொருள்

நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பில் குறைகள் ஏதுமில்லை என்றாலும் காட்சிகளில் இன்னுமே வேகத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கிறது. கறார் காவல் அதிகாரியான சரத்குமார், தனக்கு உதவி செய்யச் சம்மதிக்கும் நாயகனின் பின்புலம் குறித்து முன்னரே விசாரிக்காதது ஏன் என்பது விளங்கவில்லை. அதுபோகச் சாதாரண ஆய்வாளரான சரத்குமார், ஸ்டேஷன் பணிகளைப் பார்ப்பதுபோல ஒரு காட்சிக்கூட படத்தில் இல்லை. சிலைக் கடத்தல் ஸ்கெட்ச்சுக்காக மட்டுமே நாள் முழுக்க உழைக்கிறார்.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சுவாரஸ்யமான, அதே சமயம் எதிர்பாராத ஒன்று என்றாலும், லாஜிக் அற்றதாகவே எஞ்சி நிற்கிறது. யாரும் எதிர்பாராத திருப்பம் என்று ஒன்றை வலுகட்டாயமாக க்ளைமாக்ஸில் வைத்த உணர்வையே தருகிறது.

பரம்பொருள்

க்ரைம் படத்துக்கு ஏற்ற களத்தைப் பிடித்ததில் ஜெயித்த இயக்குநர், ட்விஸ்ட், லாஜிக் சிக்கல்கள் போன்றவற்றையும் களைந்திருந்தால் ‘பரம்பொருள்’ நம்மை இன்னும் சிலிர்க்க வைத்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.