மக்கள் அனைவரினதும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய துரித நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த

நாட்டின் அனைத்து மக்களினதும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்காக சமூக நீர்வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

அந்தவகையில், நாடளாவிய ரீதியில் குடிநீர்த் தேவையில் 62% சதவீதத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மொத்த குடிநீர்த் தேவையில் 85% சதவீத நீர் வழங்கல் இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தடையின்றி தொடர்ச்சியான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் நீர்க் கட்டணத்தை அதிகரிக்க, கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாகவும், மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஓரளவு நிவாரணம் கிடைக்குமெனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த,

கொவிட் 19 நோய்த்தொற்று மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்நாடு எதிர்கொண்ட பொருளாதார பின்னடைவினால், நாம் முதலில் தயாரித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்பட்ட போதிலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் மூலம் நாடு மீண்டும் பொருளாதார ஸ்திரநிலையை அடைந்து வருவதன் காரணமாக, படிப்படியாக அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், தற்போது நாட்டின் குடிநீர்த் தேவையில் 62% சதவீதத்தை நிறைவு செய்துள்ளதாகவும், பல பிரதேசங்களில் மக்கள் நீர் வழங்கல் அமைச்சினால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீருக்குப் பதிலாக பல்வேறு மாற்று குடிநீர் மூலங்கள் ஊடாக தமது குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்துகொள்வதன் காரணமாக நாட்டின் மொத்த குடிநீர்த் தேவையில் 85% சதவீதத்தை நாம் நிறைவு செய்தால் நாட்டின் குடிநீர் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யலாம் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் தேசிய நீர் வழங்கல் அமைச்சு என்ற வகையில், கிராமங்களுக்கே சென்று மக்களின் குடிநீர்த் தேவை தொடர்பில் ஆராய்ந்து பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமே இந்த 62 % சதவீத அடைவை எட்டியதாகவும், அதற்காக சபையின் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை செயற்பட முடியாத கஷ்டப் பிரதேசங்களிலும் மற்றும் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும், அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மூலம் அப்பிரதேச மக்களுக்கு அவசியமான குடிநீரை வழங்க பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பெரும்பாலானவைகளின் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரித, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைமைகளை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவைகளின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், சிறுநீரக நோயாளிகள் அதிகமாக உள்ள பிரதேசங்களுக்காக இந்த நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

WASSIP என்ற திட்டத்தின் கீழ் நீர் வழங்கல் சபை மற்றும் சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் நீர் வழங்க முடியாத பிரதேசங்களுக்கு நீர் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது தற்போது கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் செயற்படுத்தப்படுவதாகவும், கடல் சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களினால் ஆறுகளில் உப்பு நீர் கலப்பதைத் தவிர்க்க தடுப்புகள் அமைக்கும் பணிகளும் பல்வேறு ஆறுகளை அண்டிய பகுதிகளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.