நூலகங்களைத் தேடிச் சென்று படிப்பவர்களைப் பார்த்திருப்போம். சில இடங்களில் மக்களை நூல்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக, பைக் அல்லது ஏதாவது ஒரு வாகனத்தை `நடமாடும் புத்தக நிலையம்’ என மாற்றி இருப்பதைப் பார்த்திருப்போம்.
ஆனால், குதிரை நூலகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? என்னது குதிரை நூலகமா என்று பெயரைக் கேட்கும்போதே வியப்பாக இருக்கிறதல்லவா…
சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பலத்த மழை மக்களை கடுமையாக பாதித்தது. மழை மற்றும் நிலச்சரிவு மாநிலத்தை முடக்கியதில், பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இன்னும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்குத் தேவையான கல்வியை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலைமையைச் சரிசெய்ய நினைத்த, நைனிடால் பகுதியை சேர்ந்த ஷுபம் பதானி என்பவர், `குதிரை லைப்ரரி’ (Ghoda Library) மூலமாக புத்தகங்களை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்.
ஏனெனில் இந்தத் தொலைதூரப் பள்ளத்தாக்குகளில் சாலைகள் கிடையாது. அதனால் புத்தகங்களைக் கொண்டு செல்ல குதிரைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
கிராமம் கிராமமாகச் செல்லும் ஷுபம் பதானி, படிப்பதற்கு யாரேனும் தயாராக இருந்தால், அவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்க வைக்கிறார். இதனால் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கி உள்ளனர்.
இவருக்கு ஆதரவாக குழந்தைகளின் பெற்றோர்களும் வாரத்தில் ஒருநாள் குதிரையைக் கடனாகப் கொடுக்கிறார்கள். குதிரைகளில் புத்தகங்களைக் கொண்டு செல்வது குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் .
இப்போது உத்தரகாண்டின் பல மாவட்டங்களிலும் `குதிரை லைப்ரரி’ பிரபலமடைந்து வருகிறது. ஷுபம் பதானின் இந்த முன்னெடுப்புக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
வாழ்த்துகள் ஷுபம் பதான்!