சென்னை இராயபுரத்தில் சலவைத் தொழில் செய்யும் உத்தமன் காந்தி (ஆடுகளம் முருகதாஸ்) தன் மனைவி காளியம்மா (சாய் ஸ்ரீ பிரபாகரன்), மகள் வேம்பு (அக்ஷ்யா) மற்றும் மகன் சத்ய மூர்த்தியுடன் (ஹமரேஷ்) தினந்தோறும் பொருளாதார சிக்கலில் உழன்றபடி தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் தன் மகன் தவறான சேர்க்கையின் காரணமாக ஒழுக்கங்கெட்டுப் போவதாகக் கூறி, மகனின் பிடிவாதத்தையும் மீறி கடன் வாங்கி ஒரு தனியார் பள்ளியில் சேர்க்கிறார் காந்தி
விரும்பமின்றி அப்பள்ளிக்கு மாறும் சத்யாவை அங்குள்ள சில மாணவர்களும், ஆசிரியர்களும் ‘லோக்கல்’ , ‘கர்பரேஷன் ஸ்கூல் பையன்’ எனக் கூறி ஒதுக்கி வைப்பதோடு, எந்நேரமும் தொல்லை தருவதால் சத்யா உடைந்து போகிறான். அதிக கடன் சுமையால் குடும்பமும் தினமும் திண்டாடுகிறது. ஒருகட்டத்தில், தன் வகுப்பில் பயிலும் பார்வதி (பிரார்த்தனா சந்தீப்) மீது காதல் கொள்கிறான் சத்யா. அக்காதலும் அவனையும் அவன் குடும்பத்தையும் பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. இறுதியில் சத்யாவின் காதல் என்ன ஆனது, தன் சக வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் சத்யாவை புரிந்துகொண்டார்களா? சத்யா குடும்பத்தின் பொருளாதார சிக்கல் தீர்ந்ததா போன்ற கேள்விகளுக்கு எந்தப் புதுமையும் இல்லாத திரைக்கதையால் பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ்.
சத்யாவாக நடித்திருக்கும் ஹமரேஷ் தொடக்கக் காட்சியில் இருந்தே தன் நடிப்பால் கவர்கிறார். தன் நேர்த்தியான நடிப்பால் தனியாளாகவே பல காட்சிகளை தன் தோளில் தாங்கியிருக்கிறார். புதுமையில்லாத அதே அப்பா-அம்மா கதாபாத்திரம்தான் என்றாலும், தங்களின் யதார்த்தமான நடிப்பால் இருவரும் அழகாக நம் மனதில் நிறைகிறார்கள். பார்வதி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் பிரார்த்தனா சந்தீப், அக்கா வேம்பாக வரும் அக்ஷயா, தமிழாசிரியராக வரும் அமித் ராகவ், மாணவர்களாக வரும் சஞ்சய், ராகுல், விஷ்வா என அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
மொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். கதைக்களங்களான சலவைத் தொழிற்கூட்டத்தையும், இராயபுரத்தின் தெருக்களையும் தன் கச்சிதமான ஒளிப்பதிவால் திரைப்படத்தின் முதுகெழுப்பாக ஆக்கியிருக்கிறார் ஐ.மருதநாயகம். படம் முழுவதுமே பாடல்கள் விரவிக் கிடந்தாலும், எதுவுமே அலுப்பத்தட்டாத வகையில் இசையமைத்திருக்கிறார் சுந்தர மூர்த்தி கே.எஸ். அதற்கு கார்த்திக் நேத்தா, வேல்முருகன், இயக்குநர் ஆகியோரின் வரிகளும் துணை நின்றிருக்கின்றன. பின்னணி இசையிலும் தன் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார் சுந்தர மூர்த்தி கே.எஸ்.
தொடக்க காட்சிகளில் ஆர்.சத்யநாராயணனின் படத்தொகுப்பு ரசிக்க வைப்பதோடு, திரைக்கதையோடு அழகாக இணைய வைக்கிறது.
அதேநேரம், தொய்வான இரண்டாம் பாதியில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இறுதிக்காட்சி வரை துல்லியத்தைக் கொண்டு வந்திருக்கலாம். சலவைக் கூடங்களை கண்முன் கொண்டு வந்த விதத்தில் கலை இயக்குநர் ஆனந்த் மணியின் உழைப்பு பாராட்டுக்குரியது.
வடசென்னை சலவைக் கூடங்கள், அத்தொழிலாளர்களின் பொருளாதார / சமூக வாழ்க்கை, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் விளையாட்டு / பள்ளி உலகம் என தொடக்கத்தில் சுவாரஸ்யமாகவும் புதிய கதைக்களத்துடனேயே நகர்கிறது. தனியார் பள்ளிக்கு மாறும் சத்யாவுக்கு எழும் பிரச்சனைகள், பள்ளி காதல் என கதைக்கருவிற்குள் செல்ல செல்ல வழக்கமான பழகிப் போன பள்ளி காதல் கதையாக மாறிப்போகிறது. திரைக்கதை திருப்பங்கள், கதாபாத்திரங்களின் பரிணாமங்கள், சில காட்சிகளில் வசனங்கள் கூட நாம் யூகித்தப்படியே நகர்கிறது. மேலும், எழுதப்பட்டிருக்கும் காதல் காட்சிகளும் பள்ளி பருவத்தின் இயல்பில் இருந்து விலகி, முழுக்க முழுக்க ‘சினிமாத்தன்மையாக’ இருக்கிறது.
மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற மாணவனுக்கு ஒரு தனியார் பள்ளியில் அதன் சூழலும் அதன் ஆசிரியர்களும் நிகழ்த்தும் கொடுமைகளின் தீவிரத்தை பார்வையாளர்களுக்கு கடத்த முயன்றிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள். ஆனால், அவற்றைக் காட்சி மொழியில் சொல்லாமல், வெறும் வசனங்களால் படம் முழுவதும் நிறைத்திருக்கிறார்கள். அதனால் ஒருகட்டத்தில் அவை அலுப்புத்தட்ட தொடங்கிவிடுகின்றன. மேலும், ஒரு பள்ளி மாணவனின் அக சிக்கலையும் பேச தவறியதோடு, சத்யா, பார்வதி போன்ற பிரதான மாணவ கதாபாத்திரங்கள் தன் வயதிற்கான இயல்பில் இருந்து விலகி இயக்குநரின் குரலாகவே வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கின்றன. மேலும் பதின் பருவத்து அக மற்றும் புற சிக்கல்களை இன்னும் விரிவாக பேசத் தவறவிட்டுள்ளனர்.
இரண்டாம் பாதியில் ‘எதை சொல்லப் போகிறோம்’ என்ற குழப்பத்துடனேயே திரைக்கதை நகர்கிறது. அதனால் முதற்பாதியில் அழுத்தமாக பதிந்த பிரதான கதாபாத்திரங்களும் கூட இரண்டாம் பாதியில் ஊசலாடத் தொடங்குறது. மேலும், நம்மை ‘நெகிழ’ வைக்க நாடகத்தனமான காட்சிகளையும் கோர்த்திருக்கிறார் இயக்குநர். ‘படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் நல்லா படிக்கும்’ என்கிற கருத்தைச் சொல்ல தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கிறார் இயக்குநர். இத்தனை இடற்பாடுகளுக்கு இடையே நம்மை ஆற்றுப்படுத்துவது, கதாபாத்திரங்களின் தேர்வும் அக்கதாபாத்திரங்களின் ‘அளவான’ நடிப்பும்தான். முக்கியமாக, சத்யாவின் குடும்பம் நம் மனதில் அழுத்தமாக பதிகிறது.
இருப்பினும் இரு கதைகளாக மாற்றி மாற்றி காட்டப்பட்ட திரைக்கதையில் சத்யாவுக்கு இருக்கும் பிரச்னைகள் மட்டுமே கதையை நகர்த்தும் மைய புள்ளியாக பார்க்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க வரும் அவரது குடும்ப பின்னணியும் அவர்களது கஷ்டங்களையும் இறுதியில் சாதாரணமாகக் கடந்து போகிறார்கள். இது பார்வையாளர்களுக்கு படத்தை பற்றிய எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நகர்ந்து செல்ல வைக்கிறது. படம் முழுக்க அனைவரும் பாதிக்கப்பட்ட சத்யாவையே திட்டியும், அறிவுரையும் கூறிவருகிறார்கள். அவனை அந்த நிலைக்கு கொண்டு வந்த யாரையும் ஒரு சிறு கேள்வி கூட கேட்காதது ஏன் என்ற கேள்வியும் வருகிறது.
கதாபாத்திரத் தேர்விலும், தொழில்நுட்ப ஆக்கத்திலும் செலுத்திய கவனத்தை, தெளிவான சுவாரஸ்யமான திரைக்கதைக்கும் செலுத்தியிருந்தால் இந்த ரங்கோலியின் வண்ணங்கள் நம்மைக் கவர்ந்திருக்கும்.