சென்னை : தனியார் நிறுவனங்களிடம் இருந்து வரும், 15ம் தேதி முதல், 2024 பிப்., வரை தினமும் மாலை, 6:00 முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்க மின் வாரியம், ‘டெண்டர்’ கோரியுள்ளது.
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.
வரும், 2024 கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய மார்ச், 1ம் தேதி முதல் மே, 31ம் தேதி, 1,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் சமீபத்தில் அனுமதி கேட்டது. அதற்கு, கூடுதல் விபரங்களை சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.
அதே நேரத்தில், வரும், 15ம் தேதி முதல், 2024 பிப்., 29ம் தேதி வரை தினமும் மாலை, 6:00 முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை, 1,000 மெகா வாட் மின்சாரத்தை வாங்க, மின் வாரியம் டெண்டர் கோரிஉள்ளது.
இது, அவசியம் தானா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. எனவே, தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் என்ன விலைக்கு வாங்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மே மாதம் துவங்கிய காற்றாலை சீசன் இம்மாதம் முடிவடைகிறது. காற்றாலைகளில் இருந்து தினமும் கிடைத்த, 2,500 – 3,000 மெகா வாட் மின்சாரம், அடுத்த மாதம் முதல் கிடைக்க வாய்ப்பில்லை. தினமும் மாலை முதல் நள்ளிரவு வரை மின் தேவை அதிகம் உள்ளது.
அந்த சமயங்களில், ‘இந்திய மின்சார சந்தையில்’ ஒரு யூனிட் மின்சார விலை, 10 ரூபாயை தாண்டுகிறது. மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்து மின்சாரம் வாங்கினால், அதை விட குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கும்.
எனவே, இம்மாதம் முதல் அடுத்தாண்டு பிப்., வரை தினமும், 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது. இந்த மின்சாரம், தமிழகம் மற்றும் வெளிமாநில மின் உற்பத்தி நிறுவனங்கள், மின் வர்த்தகர்களிடம் இருந்து வாங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்