சூரியனை ஆய்வு செய்யும் இந்திய முயற்சியின் முதல்படியாக, ஆதித்யா எல்-1 விண்கலம் இப்போது விண்ணில் பாய்ந்திருக்கிறது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலத் திட்டம் பற்றிய சில புள்ளிவிவரங்கள்:
-
நிலவை ஆராயத் தொடங்கிய அதே நேரத்திலேயே சூரியனையும் குறிவைத்துவிட்டார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். சந்திரயான் – 1 திட்டத்துக்கான பணிகள் தொடங்கும்போதே, ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கான வேலைகளும் தொடங்கின. மிகவும் சிக்கலான, அதிகம் பேர் முயற்சி செய்யாத ஒரு திட்டம் என்பதால், இது இறுதி வடிவத்துக்கு வருவதற்கு 15 ஆண்டுகள் ஆகியுள்ளன.
-
இந்தியாவின் மிக வெற்றிகரமான ராக்கெட் என்று வர்ணிக்கப்படும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமே இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வழக்கமாக விண்ணுக்குக் கிளம்பிய 25 நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து விண்கலமோ, செயற்கைக்கோளோ பிரிந்து சென்றுவிடும். அதன்பின் ராக்கெட்டின் பணி தேவைப்படாது. ஆனால், ஆதித்யா எல்-1 விண்கலம் அப்படி இல்லை. ராக்கெட் விண்ணுக்குச் சென்றபின் 63 நிமிடங்கள் கழித்தே அது பிரிந்து செல்கிறது.
3. இதுபோன்ற நீண்ட நேர ராக்கெட்களை ஏவுவதும் இஸ்ரோவுக்குப் புதிதில்லை. கடந்த 2021 பிப்ரவரியில் பிரேசில் நாட்டின் அமேசானியா செயற்கைக்கோள் உள்பட 19 செயற்கைக்கோள்களை விண்ணில் அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த, இஸ்ரோ அனுப்பிய ராக்கெட் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் இயங்கியது. 2016 செப்டம்பரில் எட்டு செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவதற்கு 2 மணி நேரம் 15 நிமிடங்கள் இஸ்ரோ அனுப்பிய ராக்கெட் பயணம் செய்தது. அவையெல்லாம் பல செயற்கைக்கோள்களை வெவ்வேறு இடங்களில் நிலைநிறுத்தும் முயற்சி. இம்முறை ஆதித்யா எல்-1 என்ற ஒரே விண்கலத்துடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயணம் செய்கிறது.
4. ஆதித்யா எல்-1 விண்கலம் ஆரம்பத்தில் 16 நாட்கள் புவியின் சுற்றுவட்டப் பாதையில்தான் இயங்கும். அது நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், இந்த நாட்களில் அதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்படும். அதன்பின் அது வளிமண்டலத்திலிருந்து வெளியில் சென்று, சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்கும்.
5. ஆதித்யா எல்-1 விண்கலத்தில் Liquid Apogee Motor என்ற சிறிய இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து லாக்ராஞ்ச் 1 புள்ளி எனப்படும் இடத்தில் ஆதித்யா விண்கலத்தை நிலைநிறுத்தப் போவது இந்த இன்ஜின்தான்.
6. ஏழு ஆய்வுக்கருவிகள் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ளன. இவற்றில் மூன்று கருவிகள், லாக்ராஞ்ச் 1 புள்ளியைச் சுற்றிய பகுதிகளை ஆய்வு செய்யும். நான்கு கருவிகள், சூரியனைத் தொலைவில் இருந்தபடி ஆய்வு செய்யும். இந்த ஏழு கருவிகளில் ஆறு கருவிகள் அணைத்து வைக்கப்பட்டிருக்கும். 2024 ஜனவரி 6-ம் தேதி லாக்ராஞ்ச் 1 புள்ளியைத் தொட்டதும் இவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
7. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் ஸ்பெஷல் கருவி, Visible Emission Line Coronagraph. இது சூரியனை தினமும் 1,440 புகைப்படங்கள் எடுக்கும். 2024 பிப்ரவரி மாதத்திலிருந்து இது இயங்க ஆரம்பிக்கும்.
8. நாம் பூமியிலிருந்தபடி விண்வெளியில் உள்ளவற்றை ஆராய்வதற்கு தொலைநோக்கிகளைப் பயன்படுத்துகிறோம் அல்லவா? அப்படி விண்ணில் இருந்தபடி சூரியனை ஆராயும் தொலைநோக்கி என்று ஆதித்யா எல்-1 விண்கலத்தைச் சொல்லலாம்.
9. விரைவில் நிலவுக்கும் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியை இஸ்ரோ செய்துவருகிறது.
10.அந்தப் பயணங்கள் பாதுகாப்பாக அமைவதற்கு, சூரியனைப் பற்றிய ஆய்வுகள் அவசியம். அதைத்தான் செய்யப் போகிறது ஆதித்யா எல்-1 விண்கலம்.