Asia Cup 2023, IND vs PAK: பாகிஸ்தானுக்கு 267 இலக்கு, இந்தியா 266 ரன்களில் ஆட்டம் இழந்தது

இலங்கையில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகின்றது. கண்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில், இந்தியா தனது முதல் போட்டியில் உலகின் நம்பர் 1 ஓடிஐ அணியான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிக்கொண்டு இருக்கின்றது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மான்செஸ்டரில் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை மோதலுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்றுதான் நேருக்கு நேர் சந்திக்கின்றன. 

தற்போது இந்தியாவின் இன்னிங்க்ஸ் முடிவடைந்துள்ள நிலையில், 48.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக, ஹார்திக் பாண்டியா 87 ரன்களை எடுத்தார். இஷான் கிஷன் 82 ரன்களை எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, நசீம் ஷா, ஹேரிஸ் ரவுஃப் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர். ஷாஹீன் அஃப்ரிதி 4 விக்கெட்டுகளையும், நசீம் மற்றும் ஹேரிஸ் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

#AsiaCup2023 | India put up 266/10 against Pakistan in 48.5 overs at Pallekele International Cricket Stadium, Sri Lanka

(Ishan Kishan 82, Hardik Pandya 87; Shaheen Afridi 4/35)

(Pic: BCCI)#INDvsPAK pic.twitter.com/zGGE5Hberf

— ANI (@ANI) September 2, 2023

முன்னதாக நேபாளத்தில் நடந்த துவக்கப்போட்டியில் பாகிஸ்தான் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. ‘ஹைப்ரிட்’ மாதிரியில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆசிய கோப்பை தொடரில் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவை குரூப் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஒரு அணி குரூப்பில் இருக்கும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். பின்னர், குரூப் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். 

பிளேயிங் லெவன்

பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்

இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

பல நாடுகளுக்கு இடையில் பல்வேறு போட்டிகள் நடந்தாலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அது இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களை தாண்டி உலக அளவிலும் அதிகம் விரும்பப்பட்டு பார்க்கப்படுகின்றது. உலகத் தரமான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணியும், வேற லெவல் பேட்டிங் படையை வைத்துள்ள இந்திய அணியும் எதிர்வரும் இந்த மூன்று மாதங்களில் பல முறை மோதும் வாய்ப்பு ஏற்படும். ஆகையால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரும் காலம் கொண்டாட்டமாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை!!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.