IND vs PAK, Virat Kohli Babar Azam: பல நாள்களாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது. ஆசிய கோப்பை தொடர் என்பதை தாண்டி, உலகக் கோப்பை தொடருக்கு முன் இரு அணிகளும் மோதிக் கொள்வதே இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் காரணம் எனலாம்.
இந்திய அணி கடைசியாக பாகிஸ்தான் அணியை 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தான் எதிர்கொண்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு டி20 போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதிக்கொண்டன. அதன்படி, பார்த்தால் கடந்த 2019ஆம் ஆண்டு போட்டியில் ரோஹித் சர்மா 140 ரன்களையும், விராட் கோலி 77 ரன்களையும் குவித்திருந்தனர். அந்த போட்டியை டக்-வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
இந்நிலையில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் மோதிக்கொள்கின்றன. தற்போதைய சூழலில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும், இந்திய அணியின் பேட்டிங்கும் அவர்களுக்கு பெரும் பலமாக உள்ளது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சுல்தான் பாபர் அசாமும், இந்தியாவுக்கு கிங் கோலியும் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரர்களாக திகழ்கின்றனர்.
அந்த வகையில், இதுவரை நடந்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் விராட், பாபர் ஆகியோர் அவரவர் அணிகளுக்கு அளித்த பங்களிப்பு குறித்து இங்கு காணலாம். இதன்மூலம், இன்றைய போட்டியில் இவர்களின் பணி என்ன, அவர்களின் தேவை அணிக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரிந்துகொள்ள இயலும்.
கிங் கோலி
விராட் கோலி, இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த 13 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 48.72 என்ற அற்புதமான சராசரியுடன் 536 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக, ஆசிய கோப்பையில் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அவரின் அதிகபட்ச ரன்களையும் பதிவு செய்தார்.
2012ஆம் ஆண்டு வங்கதேசத்தின் மிர்பூரில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 பந்துகளில் 183 ரன்களை எடுத்து, ஒரு மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸை விராட் கோலி ஆடியிருப்பார். அது யாராலும் மறக்க முடியாததாகும். அந்த இன்னிங்ஸ் தான் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இந்திய பேட்டரின் சிறந்த ஆட்டமாகும் என்று விராட் கோலியை கம்பீர் புகழ்ந்து பேசியிருந்தார்.
அதேபோல், 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி 126 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நினைவுக்கூரத்தக்கது. இந்த போட்டியும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலியின் மிகச்சிறந்த ஆட்டத்திற்கான உதராணமாகும்.
சுல்தான் பாபர் அசாம்
விராட் கோலியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பாபர் அசாம் குறைவாகவே விளையாடியிருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக அவர் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 31.60 என்ற சராசரியுடன் 5 ஆட்டங்களில் 158 ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 48 ரன்கள் எடுத்த போது பாபர் தான் பாகிஸ்தான் அணியில் அதிகபட்ச ரன்களை எடுத்தவராக இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான அவரின் முதல் போட்டியில், துரதிருஷ்டவசமாக 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில், அவர் 47 மற்றும் 9 ரன்களை பதிவு செய்தார், மேலும் பாகிஸ்தான் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தற்போது பாபர் அசாம் முரட்டு ஃபார்மில் இருப்பதை மறக்கக் கூடாது. நடப்பு ஆசிய கோப்பை தொடரில், நேபாளம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவரின் சதம் அதை உறுதிப்படுத்தியுள்ளது.