சூழும் மழை மேகம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா என்ற சந்தேக இடியை ரசிகர்கள் மத்தியில் இறக்கி உள்ளது. இந்திய அணியின் வாகனம், திறனாலும் நம்பிக்கை சக்கரத்தாலும் ஓடினாலும் உதிரி பாகங்கள் சற்றே பழுதுகளோடும் சந்தேகங்களோடும் பொருத்தப்பட்டுள்ளன.
`எல்லாப் போட்டியும் போட்டியல்ல ஆசியக்கோப்பை ரசிகர்களுக்கு இந்தியா – பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டியே போட்டி’. இதற்குக் காரணம் இரு அணிகளுக்குமிடையே காலங்காலமாக பற்ற வைத்துப் பெரிதாக்கப்பட்டுள்ள பகைமை நெருப்பல்ல, இருநாட்டு கிரிக்கெட்டர்களுக்கு இடையே இழையோடும் நட்பு அதை சற்றே தணிய வைத்துள்ளது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விரு அணிகளும் நேர்கொள்ளும் ஒருநாள் போட்டி என்பது அதனை இன்னமும் வசீகரமாக்கியுள்ளது. இரு அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் என்னென்ன? 70 சதவிகிதம் குறுக்கிட வாய்ப்புள்ள மழை அனுமதித்தால் யாருடைய கை ஓங்கும்?
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை முற்றுகையிட்டுள்ள பாகிஸ்தானோடு பலப்பரீட்சை செய்ய உள்ளது இந்தியா. `Get Together’ போல உலகக்கோப்பையில் ஆட வாய்ப்புள்ள முதல்நிலை வீரர்கள் ஒன்றாக ப்ளேயிங் லெவனுக்குள் புகுத்தப்பட இருக்கிறார்கள். எனினும் காயம், ஓய்வு எனப் பல காரணங்களால் அணியை விட்டு விலகி இருந்த வீரர்களால் எந்தளவு ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும் எனும் அச்சம் தான் இந்தியாவுக்கு சற்றே பின்னடைவைத் தருகிறது.
`டாப் 3′ இடம் நிரந்தரமாக ரோஹித், கில் மற்றும் கோலியால் நிரப்பப்பட்டுள்ளது. இதில் கில் சமீபத்தில் ஒருசில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றாலும் ஃபார்ம் அவுட்டும் ஆகிவிடவில்லை. 2022-க்குப் பிறகு ஆடிய போட்டிகளில 69.4 ஆவரேஜோடு ரன்களைக் குவித்துள்ள கில் கடுமையான சவாலைத் தருபவரே. இருப்பினும் இரட்டைசத நாயகன் ரோஹித்தும் கடந்த ஆசியக்கோப்பையில் மீண்டு எழுச்சியுற்ற கோலியும் 100 சதவிகிதம் நம்பிக்கைக்கு உரியவர்களா என்பதே டாப் ஆர்டரில் கேள்விக்குறிகளை கட்டவிழ்க்கிறது. நேர்செய்யப்படாத அவர்களது இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான பலவீனமும் ஷாகீன் அஃப்ரிடியின் 2021 உலகக்கோப்பை ஸ்பெல்லும் சற்றே இந்தியாவை கவலைப்பட வைப்பவை. இந்த டாப் ஆர்டர் சோபிக்கத் தவறினால் மிடில் ஆர்டர் கைகொடுக்குமா?
பல வருடங்களாக நம்பர் 4 இடம் இந்தியாவுக்குத் தொல்லை தந்து கொண்டு இருப்பதே, அதுவும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு முன்பெல்லாம் தலைதூக்கும் முக்கியப் பிரச்சனை இது.
ஸ்ரேயாஸ் அந்த இடத்தில் கனக் கச்சிதமாக பொருத்திப் போகிறார். 2019 உலகக்கோப்பைக்குப் பின் இந்தியா இந்த இடத்தில் பரிசோதித்துள்ள 11 வீரர்களில் இவர் மட்டுமே தேறியிருக்கிறார்.
குறிப்பாக ஸ்பின் பந்துகளை எதிர்கொள்வதில் அவருக்குள்ள நிபுணத்துவமும் மத்திய ஓவர்களில் துரிதமாக ரன்களை சேர்ப்பதில் வல்லவர் என்பதுவும் இந்தியாவுக்கு சாதகமே. எனினும் காயத்தால் ஏற்பட்டுள்ள ஆறுமாத இடைவெளி மட்டுமே அச்சுறுத்தும் அம்சம்.
ஐந்தாம் இடத்துக்காக இஷான் கிஷன், சூர்யக்குமார் யாதவ், திலக் வர்மா என மூன்று பேருமே காத்திருந்தாலும் கேஎல் ராகுல் இப்போட்டியில் இல்லாததால் விக்கெட்கீப்பர் கோட்டா இஷானை வரவேற்கிறது. மேலும் ஒருநாள் போட்டிகளில் சூர்யாவின் வரலாறும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, திலக்குக்கும் அனுபவமின்மை பாதகமாகிறது. விக்கெட்கீப்பர், ஸ்பின்னை அழகாக சமாளிக்கக்கூடியவர் என எல்லாம் பொருந்தி வந்தாலும் சாம்சனும் ரிசர்வில்தான் உள்ளார் என்பது இஷானுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்ரவுண்டர்களாக ஆடவுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருவருமே பௌலிங்கில் வெரைட்டியைக் கொண்டு வருவதோடு சூழலுக்குத் தகுந்தவாறு தங்களது பேட்டிங்கை தகவமைத்துக் கொள்பவர்கள். இருப்பினும் டெத் ஓவர்களில் ஃபினிஷிங் டச்சினை இருவரில் யாரால் தரமுடியும் என்பது சந்தேகமே. ஏனெனில் 2022-க்குப் பின்பான போட்டிகளில் ஜடேஜாவின் ஒருநாள் போட்டிகளுக்குரிய ஸ்ட்ரைக்ரேட் 59.8 மட்டுமே. பாண்டியாவுக்கோ முதல் பதினைந்து பந்துகளுக்கு கடந்தாண்டு 132 ஆக இருந்த ஸ்ட்ரைக்ரேட் இந்தாண்டு 75 ஆக சரிந்துள்ளது.
மொத்தத்தில் டாப் ஆர்டரின் விதி எதிரணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களின் கையிலும், மிடில் ஆர்டர் ஸ்ரேயாஸை நம்பியும் ஃபினிஷிங் சில ஆச்சரியங்கள் அரங்கேற வேண்டுமென்ற வேண்டுதல்களோடும் இருக்கிறது. இந்த நிச்சயமின்மை பேட்டிங் நீளத்தைக் கூட்டுவதற்காக தாக்கூரையோ, ஸ்பின்னர்களுக்கு ஆதரவளிக்கும் களமெனில் அக்ஸர் பட்டேலையோ உள்ளே வைக்கவேண்டிய நிர்பந்தத்தை உண்டாக்குகிறது.
பும்ராவின் வருகை புதுப்பொலிவை அணிக்கு ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான தொடர் பழைய பும்ராவின் சாயல்களை ஆங்காங்கே காட்டியது. குறிப்பாக 1 – 10 ஓவரில் 30 ஆக உள்ள அவரது பௌலிங் ஆவரேஜ், இறுதி ஓவர்களில் 15 ஆகக் குறைகிறது. விக்கெட்டுகளும் முதல் பத்து ஓவர்களில் 34 என்றால் கடைசி பத்து ஓவர்களில் 59. டெய்ல் எண்டைத் துண்டிப்பதிலும் வல்லவர். எனவே டெத் பௌலிங்கில் இந்தியா சந்தித்து வந்த துயரங்களுக்கு ஒற்றைத் தீர்வாக பும்ராவின் வருகை இருக்கிறது.
சிராஜும் சளைத்தவரல்ல, ஒருநாள் போட்டிகளில் சிறிய காலகட்டத்தில் பெரிதாகத் தன்னை நிரூபித்து உலகத்தரவரிசைப் பட்டியலிலும் நான்காவது இடத்திலிருக்கிறார். பும்ரா இல்லாத போட்டிகளில் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட விக்கெட்டுகளில் 60 சதவிகிதம் சிராஜால் எடுக்கப்பட்டவையே. ஸ்பின்னில் குல்தீப் யாதவ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுப்பவர். ஆக பும்ரா – சிராஜ் இந்தியா பெரிதாக எதிர்நோக்கும் பௌலிங் பார்ட்னர்ஷிப். கூடவே ஷமியின் அனுபவமும் இந்தியாவுக்கான பலமே. எனினும் ஸ்ரேயாஸ் போலவே பும்ரா விஷயத்திலும் காயம் மட்டுமே ஒரே அச்சுறுத்தல், அவரால் 10 ஓவர்கள் முழுதாக வீச முடியுமா, அதிக சிரமப்பட்டு உலகக்கோப்பைக்கு முன்பாக காயம் ஏற்பட்டு விடக்கூடாதே என்ற கவலையும் கவனமும் நிரம்பவே அணியிடம் இருக்கிறது.
ஸ்பின்னைப் பொறுத்தவரை இந்தியா பெரிதாக குல்தீப்பையே சார்ந்திருக்கிறது. அவரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரே. குல்தீப்போடு ஜடேஜாவும் இணைய எதிரணியின் மத்திய வரிசையை மிடில் ஓவர்களில் அசைத்துப் பார்க்க முடியும். சுழல்பந்துக்கு ஆதரவளிக்கும் களமெனில் இந்தியா ஷமிக்கு பதிலாக அக்ஸர் படேலைக்கூட பரிசோதிக்க வாய்ப்பிருக்கிறது.
மொத்தத்தில் இந்திய ப்ளேயிங் லெவன் `கைகொடுக்கும்’ என்ற நம்பிக்கையினாலும் சற்றே சந்தேகத்தாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
சரி பாகிஸ்தானின் பக்கம் எப்படி?
உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் அமர்ந்திருக்கிறது என்று புள்ளிகளை வைத்து மட்டும் பாகிஸ்தானைப் பற்றிப் பேசமுடியாது. ஏனெனில் கடைசியாக ஆடிய 17 போட்டிகளில் 14-ல் அவர்கள் சொந்த மண்ணில் ஃப்ளாட் டிராக்களில்தான் ஆடியிருக்கிறார்கள் என்ற கேள்வி தலைதூக்கும். அதனால் இதனைப் புறந்தள்ளி வீரர்களின் திறன் அடிப்படையில் விவாதித்தால்கூட வெற்றிக்குத் தேவைப்படும் பல பாக்ஸ்களையும் பாகிஸ்தான் டிக் செய்கிறது. பாபர் அசாம், இமாம் உல் ஹக், ஃபாகர் ஜாமன் மூவருமே முன்வரிசையில் பலம் சேர்ப்பவர்கள். நேபாலுக்கு எதிரான போட்டியில் பாபர் 150 ரன்களைக் கடக்க சொற்ப ரன்களில் மற்ற இருவரும் வெளியேறியிருந்தனர். இருந்தாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர்களது முழுத்திறனும் உச்சகட்ட வீச்சோடு வெளிப்படும் என்பதில் சந்தேகமேயில்லை.
பாகிஸ்தானின் பயமுறுத்தும் டாப் ஆர்டரை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எவ்வளவு வேகமாக வெளியேற்றுகிறார்கள் என்பதில்தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. ஏனெனில் பாகிஸ்தானின் மிடில் ஆர்டரும் பலம் பொருந்தியதாகவே இருக்கிறது என்பதோடு பேட்டிங் நீளமும் பத்தாவது வீரர் வரை நீளுகிறது. ஆக டாப் 3 வீரர்கள் 20 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து ஓரளவு ரன்களை சேர்த்து விட்டாலே மீதமுள்ள வீரர்கள் விக்கெட் பற்றிய பயமின்றி புகுந்து விளையாடுவார்கள். எனவே இந்திய பௌலிங் படைக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. ஷாகீன் மற்றும் நசீம் இந்திய டாப் ஆர்டரை அல்லல்படுத்தக் கூடியவர்கள். நேபாலுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷதாப் கானின் ஸ்பெல்லும் இந்திய வீரர்களுக்கு சவால் விடுப்பதே. ஆக பாகிஸ்தானும் ஒரு முழுமையான உருவாரமுடைய அணியாகவே வலம் வருகிறது.
என்னதான் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி நிரம்பப் பேசினாலும் இந்தியா – பாகிஸ்தான் போதும் போட்டிகளில் இவையெல்லாமே `Out of the Equation’ என சொல்லப்படுவது போல் விவாதத்திற்கு அப்பாற்பட்டதே. களம் தரும் அதிர்வுகள் வேறுவிதமாக போட்டியை நகர்த்திச் செல்லும், பதற்றத்தில் பலங்கள் பலவீனமாகவும், வெல்ல வேண்டுமென்ற வெறியில் பலவீனங்கள்கூட பலமாகவும் வடிவெடுக்கும். மொத்தத்தில் அன்றைய தேதிக்கு களத்தின் நிலையையும் எதிரணி குறித்தும் அதிவேகமாகக் கணித்து அதற்கேற்ப புதுத்திட்டங்களை களத்திலேயே வகுக்கும் அணியே வெற்றி பெறும். வழக்கம் போல் அந்த வெற்றியும் கடைசி ஓவர் வரை நீள்வதாகவே இருக்கும்.
மொத்தத்தில் இந்திய அணி மகா யுத்தமான உலககோப்பைக்கு முன்பாக தனது குறைபாடுகளை சீர்தூக்கிப் பார்க்கவும் அதன் மூலமாக கேடயத்தின் பழுதுகளை செப்பனிட்டுக் கொள்ளவும், வாள் முனைகளை துருவகற்றி சீர்செய்யவும் மிகச்சரியான எதிரியை களத்தில் காண இருக்கிறது.