விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வரும் தொடர்கள் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் `பாக்கியலட்சுமி’.
இந்தத் தொடர்களில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிவர் சாய் கணேஷ் பாபு. இந்த சீரியல் மட்டுமல்ல, இன்னும் பல ஹிட் சீரியல்களில் இவர் பணிபுரிந்திருக்கிறார். சின்னத்திரை வட்டாரத்தில் இவரை ‘பாபு’ என அழைப்பார்கள். இவர், சினிமா திரைக்கதை வசனகர்த்தாவும் ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக இருப்பவருமான ரமணகிரிவாசனின் உடன் பிறந்த தம்பி.
இவருக்கும் ’அன்பே சிவம்’, ’நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகை தீபாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிகை தீபாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கைச் சுமூகமாக அமையாததால் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். இரண்டாவது திருமணம் என்பதாலோ என்னவோ ஆரம்பத்திலிருந்தே இந்தத் திருமணத்தை பாபுவின் வீட்டில் ஏற்கவில்லை என்கிறார்கள். எனவே இந்த ஜோடி திருமணத்தை பதிவுத் திருமணமாக எளிமையான முறையில் செய்து கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக சாய் கணேஷ் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்த சீரியல்களில் தீபா நடித்த போது இருவருக்கும் அறிமுகம் உண்டாகி, அதுவே நட்பாகி பிறகு காதலாக மாறியுள்ளது. இவர்களின் இந்தக் காதல் தொடர்பாக கடந்தாண்டு ஜூலையிலேயே விகடன் தளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
‘இரண்டாவது திருமணம் என்பதால் எதிர்க்குறாங்க’ –’நாம் இருவர் நமக்கு இருவர்’ நடிகை தீபா’ என்கிற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரைக்காக அப்போது தீபாவிடம் பேசியிருந்தோம்.
’’இது சென்சிடிவா அணுக வேண்டிய விஷயம். தவறா தகவல்கள் வெளியானா நான் மட்டுமே பாதிக்கப்படுவேன். ரெண்டாவது கல்யாணம்ங்கிறதால் சொந்தக்காரங்கள்லயே கொஞ்சம் பேராவது எதிர்ப்பாங்க இல்லையா? அதனால இது தொடர்பான பிரச்னைகளைச் சரி செஞ்சுட்டு முறைப்படி அறிவிக்கலாம்னு இருக்கோம். அதனால இப்போதைக்குக் கல்யாணம் தொடர்பா என்னால் உறுதியான பதிலைச் சொல்ல முடியலை. ஆனா எங்க ரெண்டு பேரையும் பிரிக்க நினைச்சு யார் என்ன சதி செஞ்சாலும் அதையெல்லாம் முறியடிச்சு நிச்சயம் ஒருநாள் நாங்க கல்யாணம் செய்துப்போம்” எனப் பேசியிருந்தார்.
தற்போது வெளியாயிருக்கும் தகவல்படி இருவருக்குமான ரகசியத் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்து விட்டதாகவும் பாபுவின் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததாலேயே வெளியுலகத்துக்குத் தகவல் சொல்லாமல் இருந்ததாகவும் தெரிகிறது.
இது பற்றி தீபா மற்றும் பாபுவின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, ’’ரமணன், பாபு ரெண்டு பேரும் கூட்டுக் குடும்பமா வசிச்சு வந்தாங்க. பாபுவுக்குத் திருமணம் ஆகாம இருந்தது. அவர் தீபாவுடன் பழகியது ரமணனுக்குப் பிடிக்கலை. அதனால இந்தக் கல்யாணத்தை அவங்க வீட்டுல விரும்பலை. அதனால கல்யாணத்தை எதிர்த்தாங்க. ஒருகட்டத்துல தீபாவை ‘பேசாம ஒதுங்கிப் போயிடு; இல்லாட்டி டிவியிலயே இருக்க முடியாது’னு பாபு வீட்டுத் தரப்புல இருந்து மிரட்டியதாகவும் சொல்லப்படுது. ஆனாலும் இப்ப எல்லா எதிர்ப்புகளையும் மீறி இந்த ஜோடி கல்யாணம் செய்திட்டிருக்காங்க’’ என்கின்றனர்.
தீபாவை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
“ஆமா சார். கல்யாணம் ஆகிடுச்சு. பதிவுத் திருமணமா பண்ணிக்கிட்டோம். மத்த விஷயங்களை நான் பிறகு பேசறேன்” என முடித்துக் கொண்டார்.